நடிகர் விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸாக உள்ளது. இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதுவரை 3 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. படத்தின் டிரெய்லர் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டு, 44 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
தி கோட் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. கடந்த முறை லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்ததால் அந்த விழா நடத்தபடவில்லை. ஆனால் தி கோட் இசை வெளியீட்டு விழா மலேசியா அல்லது சிங்கப்பூரில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதுவும் கேன்சல் ஆகி விட்டது.
தி கோட் படம் ரிலீஸ் ஆக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மற்ற 2 பாடல்களை ரிலீஸ் செய்ய டைரக்டர் வெங்கட்பிரபு முடிவு செய்திருக்கிறார். அதில் விஜய், திரிஷா குத்தாட்டம் போட்ட பாடலை இன்றோ அல்லது நாளையே ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாதம் துவங்கிய பின்பு, மற்றொரு பாடலை ரிலீஸ் செய்யலாம் எனத் தெரிகிறது.
தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தால் அது படத்துக்கு பெரிய பிரமோசனாக இருந்திருக்கும். நடிகர் விஜய் அந்த விழாவில் பங்கேற்று பேசியிருந்தால் அது படத்துக்கு பெரிய பலமாக, அமைந்திருக்கும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், விஜய் அதற்கு முற்றிலும் மறுத்து விட்டார். விஜய் இல்லாமல் இசை வெளியீட்டு விழா நடத்துவது பயனில்லை என வெங்கட்பிரபுவும் அதை தவிர்த்து விட்டார்.
இப்போது தி கோட் படத்தை பொறுத்த வரை பாடல்கள் ரிலீஸ், டிரெய்லர் போன்ற விஷயங்கள் மட்டுமே படத்துக்கு பிரமோவாக இருந்திருக்கின்றன. இதுதவிர நடிகர் விஜய் இல்லாமல் டைரக்டர் வெங்கட்பிரபு தலைமையிலான படக்குழுவினர் மட்டும் சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.





