நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என்ற கொள்கை முழக்கத்துடன் அவர் மக்களை சந்திக்க சனிக்கிழமைகளில் மாவட்டம் வாரியாக வருகை தருகிறார்.
கடந்த வாரத்தில் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் களை கட்டிய நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் வருகிற 20ம் தேதி நாகை திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர உள்ளது. அதன்பிறகு டிசம்பர் 20ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்களை நேரில் சந்தித்து நடிகர் விஜய் பேச இருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசையும் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைகடல் என திரண்டு அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கூடுகிற கூட்டம் எல்லாம் விஜய்க்கு ஓட்டாக மாறாது என்றும் பிற அரசியல் தலைவர்கள் சாபம் விட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் டப்பிங் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் துணை நடிகர்கள் என படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே டப்பிங் பேசி முடித்து விட்டனர். ஆனால் நடிகர் விஜய் பேச வேண்டிய 2 நாள் டப்பிங் பணிகள் மட்டுமே மீதம் உள்ளது.
நடிகர் விஜய் அந்த 2 நாள் டப்பிங்கை பேசி கொடுத்து விட்டால் 100 சதவீதம் ஜனநாயகன் ரிலீஸ்க்கு தயாராகி விடும். ஆனால் விஜய் இப்போது அரசியல் களத்தில் ரொம்பவும் பிஸியாக இருப்பதால் இதுவரை அவர் டப்பிங் பேச தேதி ஒதுக்கவில்லை. ஆனாலும் ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலீஸ் என்பதால் ஏகப்பட்ட கால அவகாசம் உள்ளது.
அதே நேரத்தில் தொடர்ந்து அரசியல் களத்தில் நடிகர் விஜய் பரபரப்பாக இருந்து வருவதால் ஜனநாயகன் படத்தையே ரசிகர்கள் பெரும்பாலும் மறந்து விட்டனர். அதனால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஜனநாயகன் படத்தை ரசிகர்கள் பார்க்க வரும்போது படத்தின் அபார வெற்றிக்கு அதுவே பெரிய பக்கபலமாக இருக்கும். ஆனால் டிசம்பர் மாதத்தில் படத்தின் பிரமோசன் பணிகள் துவங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.





