நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள். 1970களின் துவக்கத்தில் கமலும், 1970களின் பிற்பகுதியில் ரஜினியும் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகன்களாக நுழைந்தவர்கள். இருவருமே இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் சீடர்களாக இருந்து, பிரபலமானவர்கள்தான்.
ஆயிரக்கணக்கில் முன்னணி நடிகர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த 1980களிலேயே ரஜினி, கமல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியவர்கள். அதற்கு பிறகு அவர்களது சம்பளம் கோடிகளாக அதிகரித்தது. இப்போது ஒரு படத்தில் நடிக்க கமல்ஹாசன் ரூ. 150 கோடி, ரஜினி ரூ. 140 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. விரைவில் தங்களது சம்பளத்தை அவர்கள் உயர்த்தவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை துவக்கி, பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆனால், இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள ஒரு மாநில கட்சிக்கான அங்கீகாரம், கமல்ஹாசன் நடத்தி வரும் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு கிடைக்கவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.
இப்போது திமுக ஆதரவாளராக மாறி, ஸ்டாலினுக்கு மற்றொரு திமுக தொண்டனாக தன் விசுவாசத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரமும் செய்தார். இப்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே இன்று பெரிய செல்வந்தர்களாக, நடிகர்களாக இருக்க காரணம் ரசிகர்கள், ரசிகர்கள் மட்டுமே என்றால் அது பொய்யல்ல.
ஆனால் அந்த ரசிகர்களுக்காக எந்தவிதமான உதவிகளையும் செய்ய இந்த ரஜினி, கமல்ஹாசன் எப்போதுமே முன்வந்தது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. நடிகர் விஜய், 2 ஆண்டுகளாக பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு அதிக மதிப்பெண் பெற்றவர்களை பாராட்டி கவுரவித்து ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் வீதம், தமிழகம் முழுதும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து அழைத்து வந்து, ரொக்கப் பரிசு தருகிறார், வைர நெக்லஸ், வைர மோதிரம் என பரிசளித்து, அவர்களை கௌரவப்படுத்தி வருகிறார்.
அரசியல், சினிமா என்ற எல்லாவிதமான காரணங்களையும் கடந்து அவர் உதவுவது உண்மை. தனது சொந்த பணத்தில் ஆண்டுக்கு ரூ. 3 கோடி வரை மாணவ, மாணவியருக்காக அவர் செலவு செய்கிறார். ஆனால் ரஜினி, கமல் போன்றவர்கள் ஒரு பள்ளிக் கட்டிடம் கட்ட, ஒரு வகுப்பறை கட்ட, மருத்துவ உதவிகள் என பொதுமக்களுக்கு என எப்போதுமே உதவியது இல்லை. ஆனால் அவர்கள் ரசிகர்கள்தான், தங்களது சொந்த பணத்தில் இலவச நோட்டுப் புத்தகம், பேனா போன்றவற்றை வழங்குகின்றனர். அதனால், ரஜினி கமலுடன் ஒப்பிடுகையில், மாணவ சமுதாயத்தின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள விஜய் எப்போதுதான் மாஸ்தான் என சினிமா ரசிகர்களே பாராட்டி வருகின்றனர்.





