சென்னை, திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இதில் 19 மாவட்டங்களை சேர்ந்த 725 மாணவ, மாணவியர் உட்பட 3500 பேர் கலந்துக்கொண்டுள்ளனர். கடந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு விஜய், ரொக்கப் பரிசுடன் விருது வழங்கி கெரளவித்து வருகிறார்.
இன்றைய நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய நடிகர் விஜய், நீட் தேர்வு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில் நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது. மாநில மொழியில் படித்த கிராமப்புற மாணவ மாணவியரை என்சிஇஆர்டி சிலபஸ்சில் படிக்க சொல்வது சரியல்ல. நீட் தேர்வு குளறுபடிகளால் அதன் மீதான நம்பகத் தன்மையே மக்களுக்கு போய்விட்டது. அதனால் நீட் தேர்வு விலக்குதான் இதற்கு தீர்வு என்று கூறினார்.
மேலும் நடிகர் விஜய் பேசுகையில், நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு மத்திய அரசு காலதாமதம் எதுவும் செய்யாமல், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த பிரச்னையை முடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு நிரந்த தீர்வு என்ன என்று கேட்டால், இந்த கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ஒரு இடைக்கால தீர்வா இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப்பட்டியல் என்ற ஒன்றை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும்.
இப்போது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்னை என்றால், அந்த துறைகளை எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும், முழுக்க முழுக்க அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் மாநில அரசுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், என்று பேசியிருக்கிறார் நடிகர் விஜய்.
நீட் ரத்து கோரிய தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்பதை கூறியதாக நடிகர் விஜய், நீட் தேர்வு பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணும் விதமாக, பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை, மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று யோசனை சொல்லி பேசியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.





