நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அடையாளங்களோடு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. கும்கி படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. ஆனால் அதன்பிறகு அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனினும் விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் இவன் வேற மாதிரி சிகரம் தொடு லவ் மேரேஜ் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. விக்ரம் பிரபுவை பொருத்த வரை நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த சிறை என்ற படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகிறது. சிறை படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, கும்கி படத்தில் ஆரம்பித்த என்னுடைய சினிமா பயணம் 25வது படம் வரை வெற்றிகரமாக வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நான் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதில்லை. குறிப்பிட்ட சம்பளம் கேட்டு முரண்டு பிடிப்பதில்லை. சினிமாவை நான் ஒரு நல்ல கலையாக நினைக்கிறேன். அதனால் நல்ல படம் நல்ல கதை சிறந்த படக்குழு என்பதில் தான் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.
என்னுடைய தாத்தா சிவாஜி கணேசன் கட்டபொம்மன் பாரதியார் வஉசி ஆக நடித்திருக்கிறார். இனி அப்படிப்பட்ட படங்களை எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. காரணம் அதற்கு தனி உழைப்பு தேவைப்படும். அதேபோல் நானும் தாத்தா சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு படத்தில் அவராக நடிக்க மாட்டேன். அதற்கு காரணம் உலகத்தில் ஒரே ஒரு சிவாஜி தான். அவரைப்போல் யாரும் நடிக்க முடியாது.
என்னுடைய சகோதரியின் கணவர் என் மச்சான் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜீத் குமார் நடிப்பில் படம் பண்ணுகிறார் என்பதே சந்தோசம். அந்தப் படத்தில் அவர் நடிக்க அழைத்தால் எதுவும் பேசாமல் கவுரவ வேடத்தில் கூட நடிப்பேன். அப்பா பிரபுவுடன் நான் நடிக்க கதைகள் கேட்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது பெரிய மகிழ்ச்சியை தந்தது என்று நடிகர் விக்ரம் பிரபு அதில் கூறியிருக்கிறார்.





