கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்ட நிலையில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு சென்னையில் இருந்து கரூருக்கு வந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்தார். நடந்த இந்த துயர சம்பவம் குறித்து திரை பிரபலங்கள் பலரும் வருத்தமும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, முழுக்க முழுக்க முட்டாள்தனமானது. நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் பிரச்சார கூட்டத்தில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரமான நிகழ்வு. இந்த சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைத்தால் இதயம் வலிக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜயின் தவெக கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். இதுவே இப்போது அந்த கட்சி செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியாக இருக்கும் இனி எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்த ஒரு அரசியல் பேரணியும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று நடிகர் விஷால் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று ஜீவி பிரகாஷ் குமார் அதில் தெரிவித்துள்ளார்.





