இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம் முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை நீர்ப்பறவை ராட்சசன் லால் சலாம் கட்டா குஸ்தி என பல படங்களில் நடித்தார்.
இப்போது விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ஓஹோ எந்தன் பேபி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படம் வருகிற 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஷ்ணு விஷால்தான். கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ரஜினி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
திருமண வாழ்வில் 8 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த 2018ம் ஆண்டில் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பின்னர் பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை காதலித்த விஷ்ணு விஷால், கடந்த 2021ம் ஆண்டில் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான், மிரா என பெயர் சூட்டி இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், தனது முதல் மனைவி ரஜினி குறித்து கூறியதாவது, என்னுடைய முதல் மனைவி ரஜினிக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது எங்கள் திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் தெரியவந்தது. என்ன நடந்தாலும் கடைசி வரை நான் அவரை பார்த்துக்கொள்வேன் என்ற முடிவில்தான் ரஜினியை திருமணம் செய்து கொண்டேன். திருமணமான பிறகு 6 ஆண்டுகள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் இருவரும் இருந்தோம்.
அந்த 6 ஆண்டுகளில் 6 மாதத்துக்கு ஒரு முறை கேன்சருக்கு ரஜினிக்கு சிகிச்சை எடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சினிமாவில் சற்று அதிகம் கவனம் செலுத்தினேன். முழுக்க முழுக்க சினிமாவில் நான் ஆர்வம் காட்டியதால், தன் மீது போதிய அக்கறை கவனம் இல்லை என்று என் மனைவி ரஜினி தவறாக நினைத்து விட்டார். அதனால் எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்ய என் மனைவி ரஜினி முடிவெடுத்தார். நான் ரஜினியிடம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நான் நடித்த ராட்சசன் படம் ரிலீஸ் ஆன 5வது நாள் எங்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது. ஊர் முழுவதும் ராட்சசன் பட வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, எனக்கு விவாகரத்து ஆனதற்காக நான் கண்கலங்கி அழுது கொண்டிருந்தேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் அந்த நேர்காணலில் வருத்தமாக கூறி இருக்கிறார்.





