தமிழ் சினிமாவில் இப்போதைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் என பல மொழிகளிலும் அனிருத் இசைக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. இப்போது ஒரு படத்துக்கு இசையமைக்க அனிருத் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
காமெடி நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் விவேக். வெறும் காமெடியை மட்டுமே தராமல் அதில் நல்ல சமுதாய கருத்துகளை சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் விவேக். அதனால்தான் அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டமும் ரசிகர்களிடம் கிடைத்தது.
அவரை பற்றி பலரும் அறியாத விஷயம், அவர் தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டவர் என்பதுதான். இதை ஒரு இயக்கமாகவே நடிகர் விவேக் தனது சினிமா நடிப்புக்கு இடையில் செய்து வந்தார். துரதிஷ்டவசமாக நடிகர் விவேக் தனது 59வது வயதில் காலமாகி விட்டார். இன்னும் பல நூறு படங்களில் நடித்திருக்க வேண்டிய சிறந்த சிந்தனையாளர், நல்ல கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த நடிகர் விவேக் ஒருமுறை விழா ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது விழாவில் இசையமைப்பாளர் அனிருத் குறித்து நடிகர் விவேக் பேசியதாவது, நான் ஒருமுறை அனிருத்தை சந்திப்பதற்காக அவரது ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தேன். அவரிடம் நேரில் பல விஷயங்களை பேசிவிட்டு பிறகு வீட்டுக்கு புறப்பட்டேன்.
அப்போது மாடியில் இருந்து 2, 3 மாடிப்படிகளை தாண்டி நான் கீழே இறங்கி வந்து விட்டேன். காரில் ஏறி அமர்ந்த போது என் கால்களில் செருப்புகள் இல்லை. அடடா மாடியில் கழட்டி வைத்துவிட்டு வந்து விட்டோமா, சரி மறுபடியும் போய் செப்பல்ஸ்சை போட்டுட்டு வரலாம் என காரை விட்டு இறங்கினேன்.
அப்போது சார், இதை நீங்க அங்கேயே மறந்துட்டு வந்துட்டீங்க என்று கூறியபடி கையில் என் செப்பல்ஸ்களை எடுத்துக்கொண்டு அனிருத் இறங்கி வந்தார். ஒருவருக்கு திறமை எவ்வளவு வேணாலும் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறந்த மனித பண்பு என்பது பெரிய விஷயம். அனிருத்தை பார்த்து அப்படியே நான் அசந்து போய் நின்றுவிட்டேன் என்று நடிகர் விவேக் வெளிப்படையாக அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





