பிரபல நடன இயக்குநர் ரகுராம் மகள் காயத்ரி ரகுராம். இவர் சினிமாவில் பிரபல நடிகையாக கடந்த 1990களில் இருந்தார். கடந்த 2002ம் ஆண்டில் சார்லி சாப்ளின் படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
காய்தரி ரகுராம், நடனக்கலைஞர் என்பதால் பல படங்களில், நடன இயக்குநராக பணிசெய்திருக்கிறார். தாரை தப்பட்டை போன்ற சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடவும் செய்தார். ஆனால் நடன இயக்குநராக, நடிகையாக பெரிய அளவில் காயத்ரி ரகுராம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறவில்லை.
கடந்த 2017ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் காயத்ரி ரகுராம் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காயத்ரி ரகுராம், அடிக்கடி சக போட்டியாளராக நடிகை ஓவியாவிடம் சண்டை போட்டார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் நடந்துக்கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. எனினும் இந்த போட்டியில் குறிப்பிட்ட நாட்களில் காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில் அரசியல் ஆர்வம் காரணமாக காயத்ரி ரகுராம், கடந்த 2014ம் ஆண்டில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு கலை இலக்கிய பிரிவில், செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கட்சியில் தொடர்ந்து அவர் ஒதுக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் காயத்ரி ரகுராம், நேரடியாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்தார். பாஜகவில் இருந்துக்கொண்டே கட்சி குறித்த விமர்சனங்களை காயத்ரி ரகுராம் பொதுவெளியில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார், இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரியில் கட்சியை விட்டு வெளியேறினார்.
கடந்த ஜனவரி 19ம் தேதி அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவருக்கு அதிமுகவில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், எனக்கு அதிமுகவில் மகளிரணி துணைச் செயலாளராக என்னை நியமித்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.





