அஞ்சான் திரைப்படத்திற்கு பிறகு கங்குவா திரைப்படத்தின் மூலம் மீண்டும் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தப் படத்திற்காகவா இரண்டரை ஆண்டுகள் செலவழித்தீர்கள் என்று பலரும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். படத்தில் எதுவுமே செட் ஆகவில்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, சிறுத்தை சிவா மீதும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதும் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் முந்தைய நேரத்தில் பேசிய பேச்சுகள் தான். மிகவும் கான்பிடென்ட் ஆக ஒவ்வொருவரும் படத்தின் மீது பேசிய பேச்சுக்கள் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
இதன் வெளிப்பாடு தான் தற்போது விமர்சனங்களாக எழுந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள் என்று கூறிய சூர்யாவை தற்போது விமர்சிக்காத ஆட்களே இல்லை. அதேபோல் சிறுத்தை சிவா ஏன் இப்படி ஒரு மட்டமான திரைக்கதையை கொண்டு வந்திருக்கிறார் என்றும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
படம் நிச்சயம் ஆயிரம் கோடி அல்லது 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று கூறிய ஞானவேல் ராஜாவையும் பலர் வறுத்தெடுத்து வருகின்றனர். இப்படியான சூழலில் கங்குவா திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் மட்டும் 89 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதனை பிளாக் பஸ்டர் திரைப்படம் என்று கூறி வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
இப்படியான சூழலில் தான் தனது கணவரின் கங்குவா திரைப்படம் குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார் அவரது மனைவி ஜோதிகா. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டிருக்கும் அவர், கங்குவா திரைப்படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக கொந்தளித்து இருக்கிறார்.
படத்தின் அரை மணி நேரம் நன்றாக இல்லை. சத்தம் இரைச்சலாக இருக்கிறது என்று கூறுவதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மற்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வராத விமர்சனம் கங்குவா திரைப்படத்திற்கு மட்டும் ஏன் வருகிறது. கங்குவா நிச்சயம் ஒரு நல்ல சினிமாவுக்கான அனுபவம். படத்தின் நல்ல பகுதிகளை விமர்சனம் செய்ய பலரும் தவறி விட்டார்கள் என்றே நினைக்கிறேன். கங்குவா திரைப்படம் குறித்து நான் பெருமை கொள்கிறேன் என்று அவர் பேசி இருக்கிறார்.





