தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளிலும் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் மீனா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. இப்போதும் மீனா சினிமாவில் அவ்வப்போது தனக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பிறகு எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து வீரா மற்றும் முத்து படங்களிலும் ரஜினிக்கு நாயகியாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திலும் மீனா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் மட்டுமின்றி கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் சரத்குமார் அஜீத்குமார் முரளி பார்த்திபன் என பல ஹீரோக்களுக்கு மீனா ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு பாராட்டு விழாவும் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் மறைந்தார்.
கணவரை இழந்த சோகத்தில் சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த மீனா, மீண்டும் மலையாளத்தில் திரிஷியம் 2 படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் நடிகர் விஜய்க்கு மகளாக தெறி படத்திலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த் சாமிக்கு மகளாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடிகை மீனா வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, சினிமாவில் 50 ஆண்டுகள் கலைபயணத்தை நிறைவு செய்திருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். அவரது எளிமை ரொம்ப பிடிக்கும். ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நான் உண்டு என் வேலை உண்டு என்று ஸ்மூத்தாக வேலை செய்கிற அவரது கேரக்டர் ரொம்ப பிடிக்கும்.
சக மனிதர்களுக்கு அவர் தரும் மரியாதை, எதிரில் இருப்பது அது குழந்தையாக இருந்தாலும் பெரிய ஸ்டாராக இருந்தாலும் யாராக இருந்தாலும் எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் சமமாக பாவித்து மரியாதை தருகிற ரஜினி சாரின் அந்த குணம் ரொம்ப பிடிக்கும். தியானம் யோகா, அதில் அவருக்கு இருக்கிற ஈடுபாடு எனக்கு தெரியும். இப்படி அவரிடம் இருக்கும் நிறைய நல்ல விஷயங்களை, என்னையும் அறியாமல் நான் முடிந்த வரை பாலோப் பண்றேன். அவரை வாழ்த்த வயதில்லை என்றாலும் அவர் சிறப்பாக வாழவும் கூலி படம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன் என்று நடிகை மீனா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





