தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களில் காமெடியை புகுத்தி அதை சக்சஸ்ஃபுல்லாக மாற்றும் வித்தையை அறிந்தவர் இயக்குனர் ராகவா லாரன்ஸ். முனி திரைப்படத்தின் மூலம் ஹாரர் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்த ராகவா லாரன்ஸ், அதில் வெற்றியையும் காண ஆரம்பித்தார்.
குறிப்பாக இவர் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தை இங்கு நிச்சயம் கூற தான் வேண்டும். பாதி நகைச்சுவை பாதி திரில்லர் என கலந்துகட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக படத்தில் ராகவா லாரன்ஸின் நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்தது.
இறுதிக் காட்சியில் அவர் பெண் வேடத்தில் பாடும் பாடல் இப்போது வரை பிரபலம். கோவை சரளா தேவதர்ஷினி என நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத நடிகைகளால் காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ராகவா லாரன்ஸ். இந்த ஃபார்முலா மக்கள் மத்தியில் ரீச் ஆனதால் தொடர்ந்து ஹாரர் திரைப்படங்களை அவர் இயக்க ஆரம்பித்தார்.
இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. குறிப்பாக காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகமும் ராகவா லாரன்ஸுக்கு வெற்றியை தேடி கொடுத்தது. ஆனால், இதன் மூன்றாம் பாகம் அவர் நினைத்த மாதிரி வரவில்லை. எடுத்த கதையே திரும்பத் திரும்ப எடுத்து அதில் காமெடியை புகுத்தியது ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பைத் தட்டியதால் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்திற்கு சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க சுந்தர் சி யும், அரண்மனை என்னும் பெயரில் இதே போல் ஹாரர் கலந்த காமெடி திரைப்படங்களை கொடுக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் எதற்கும் பாகுபாடு பார்க்காமல் அந்த படங்களுக்கும் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்தனர். சொல்லி வைத்தது போல அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமும் நன்றாக போகவில்லை. இருப்பினும் மனம் தளராமல் நான்காம் பாகத்தை அவர் எடுக்க, அது 100 கோடி ரூபாய் ஈட்டியது.
அரண்மனை படத்தின் நான்காம் பாகம் ஹிட்டாக, தற்போது ராகவா லாரன்ஸும் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை எடுக்க சென்று விட்டார். இதன் படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த திரைப்படத்தை வெளியிட ராகவா லாரன்ஸ் திட்டமிட்டு இருக்கிறார். படத்தில் கதாநாயகியாக மிருணால் தாகூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





