மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் நடிகை பத்மப்பிரியா. சத்தம் போடாதே பட்டியல் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் மிருகம் தங்க மீன்கள் என பல படங்களில் நடித்தவர். என்றாலும் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் போன்ற சேரன் இயக்கிய படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பேசிய நடிகை பத்மப்பிரியா கூறியதாவது, நான் எனது கேரியரில் நல்ல படங்களில் நடித்திருக்கிறேன். தவமாய் தவமிருந்து பட்டியல் சத்தம் போடாதே பொக்கிஷம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என அந்த பட்டியல் இருக்கிறது.
நான் அடிப்படையில் ஒரு டான்ஸர்தான். ஆனால் என்னுடைய நடனத் திறமையை காட்டும்படியான எந்த ரோலும் இதுவரை எனக்கு அமையவே இல்லை. இனி அது மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். பழசி ராஜா படத்தில் களரி செய்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அப்படிப்பட்ட கதைகள் கொண்ட இயக்குனர்கள் யாராக இருந்தாலும் தாராளமாக என்னை தொடர்பு கொள்ளலாம். கதை பிடித்திருந்தால் நடிப்பேன். சினிமாவில் வரும் ஏற்ற இறக்கங்கள் பற்றி எல்லாம் பெரிதாக நான் நினைக்க மாட்டேன். ஆனால் சினிமாவில் நான் தாழ்ந்திருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு தெரியும்.
ஏழு மாதங்களுக்கு முன்புதான் நான் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். எனவே அதற்கான வேலைகளையும் நான் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். அதேபோல் என் மன ஓட்டத்துக்கு ஒத்துப்போகும் எழுத்தாளர்களுடன் நான் டச்சில் தான் இருக்கிறேன். ஒரு பெரிய ஏற்றத்துக்கு செல்லும்போது கண்டிப்பாக இறக்கமும் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
திருமணமே செய்ய மாட்டேன் என்று நினைத்திருந்த பெண் நான். ஆனால் திருமணம் செய்து கொண்டேன். வதந்திகள் என்பது இந்திய சமூகத்தில் ஒரு டிரேட் மார்க். அதை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட வேண்டும். எதை வேண்டுமானாலும் எழுவார்கள். என் படங்கள் பற்றி இல்லாவிட்டால் எனக்கு குழந்தை இருக்கிறது என்று கூட எழுதுவார்கள் என்று நடிகை பத்மப்பிரியா கூறியிருக்கிறார்.





