தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். சூரியவம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற வெற்றிப் படங்களை தந்த அவர், கடந்த 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை துவக்கி, 28 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆனால் அவரது கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய அளவில் மக்களால் கவனிக்கப்படவில்லை.
ஏற்கனவே மும்பையில் இருந்த போது, சாயா தேவி என்பவரை திருமணம் செய்து பிரிந்திருந்த சரத்குமார், நடிகை மீனாவை திருமணம் செய்ய முயற்சித்தார். அவரது அம்மா அதற்கு மறுத்து விட்டதால் பிறகு சூரியவம்சம் படத்தில் நடித்த போது, ஏற்பட்ட பழக்கம் நட்பாகி, பின்பு காதலாக ராதிகாவை 2வது திருமணம் செய்தார் சரத்குமார்.
இந்நிலையில், இந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. இதுகுறித்து இரவு 2 மணிக்கு ராதிகாவை எழுப்பி யோசனை கேட்டிருக்கிறார் அவரது கணவர் சரத்குமார். இதை சரத்குமாரே வெளிப்படையாக கூறிய நிலையில், சமூக வலைதளங்களில் இதை பலரும் கலாய்த்தனர்.
விருதுநகர் தொகுதியில், தனது மனைவி ராதிகாவை வேட்பாளராக களம் இறக்கினார் சரத்குமார். பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆதரவுடன் சமக வேட்பாளராக, விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சரத்குமாரும், தெருத் தெருவாக ராதிகாவுடன் சென்று, மக்களிடம் ஆதரவு திரட்டினார். அதே தொகுதியில் தேமுதிக வேட்பாளராக கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் போட்டியிட்டார்.
இந்நிலையில், நேற்று விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 ஓட்டுகளும், ராதிகா 1,66,271 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி கௌசிக் 77,031 ஓட்டுகளும் பெற்று தோல்வியடைந்தனர். 4,377 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்த விஜயபிரபாகரன், ராதிகா போட்டியிடாமல் இருந்திருந்தால் நிச்சயம் திமுக வேட்பாளரை அதிக ஓட்டுகளில் வென்றிருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த ராதிகா, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல. சில போர்கள் இந்த உலகுக்கு யாரோ ஒருவர் போர்க்களத்தில் இருந்தார் என்பதை சொல்லத்தான். உங்கள் அன்புக்கு நன்றி, என்று கூறியுள்ளார்.





