நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், சுருக்கமாக தி கோட் என அழைக்கப்படும் இந்த படம், வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, விஜய் பிறந்த நாளில் வருகிற 22ம் தேதி செகன்ட் சிங்கிள் வெளியாகிறது.
இதற்கு முன் விஜய் நடித்த லியோ படத்துக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. கைதி, விக்ரம் படங்களை போல பெரிய ஹிட் படமாக விஜய்க்கு லியோ இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இரட்டை பிறவி, நரபலி, ஜாதகம் என லோகேஷ் கனகராஜ் பூ சுற்றியதால் விஜய் ரசிகர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
ஆனால் லியோ படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் கதை, திரைக்கதை பிடிக்காவிட்டாலும் விஜய், திரிஷா, அர்ஜூன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் என நட்சத்திர நடிகர்களின் நடிப்புக்காக அந்த படத்தை ரசிகர்கள் விரும்பி பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் படம் தி கோட் என்பதால், வெங்கட்பிரபு தரமான சம்பவமாக இந்த படத்தை தந்திருப்பார் என, ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். ஏற்கனவே மங்காத்தா, மாநாடு, சென்னை 28 போன்ற மெகா ஹிட் படங்களை தந்த வெங்கட்பிரபு, விஜயை வைத்து வெற லெவல் கதை செய்திருப்பார் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருக்கிறார். இதில் அப்பாவுக்கு ஜோடியாக சினேகா, மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளனர். வில்லனாக மைக் மோகன் நடித்திருக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா போன்றவர்களும் நடித்துள்ளனர். இதுதவிர ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த், விவேக் போன்றவர்களும் இந்த படத்தில் வருகின்றனர். விஜய் 3வது ஒரு ரோலும் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் வசீகரா படத்தில், விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். அதன்பிறகு இந்த படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சினேகா, இந்த படத்தில் நான் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். விஜய் வரும் அனைத்து காட்சிகளிலும் நானும் வருவேன். அதனால் தாராளமாக இந்த படம் முழுவதும் என்னை பார்க்கலாம், என்று லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்திருக்கிறார்.





