லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தனது 68 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் மாஸ் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு தான் இந்த படத்தின் இயக்குனர். பிகில் படத்தை எடுத்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம், இரண்டாவது முறையாக விஜய் உடன் சேர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் புதிய கீதைக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. டெல்லி, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அடுத்த கட்ட சூட்டிங் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதற்காக லொகேஷன் பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. இது தொடர்பாக அவரது வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
அறிவியல் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக டைம் டிராவல் கதையை வெங்கட் பிரபு கையில் எடுத்திருப்பதாகவும், எதிர்காலத்தில் இருக்கும் விஜய், நிகழ்காலத்தில் இருக்கும் விஜயை சந்திப்பது போல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. இது சரி என்பது போலையே படத்தின் முதல் போஸ்டர் அமைந்தது.
அதில் ஒரு பக்கம் வயதான விஜயின் இன்னொரு பக்கம் இளமையான தோற்றத்தில் விஜயும் சேர்ந்து வருவது போல் புகைப்படத்தில் இடம் பெற்று இருந்தது. இந்தப் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை சுருக்கி கோட் என ரசிகர்கள் அழைக்கின்றனர். இணையத்தில், மெஸ்ஸி போன்ற ஜாம்பவான்களை பலரும் கோட் என்று அழைக்க, அந்த வார்த்தையை தான் தற்போது தூக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.
கோட் படத்தில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் அதில் இடம்பெற்று இருக்கும் நட்சத்திரங்கள் தான். அறிவியல் சார்ந்த கதையை வைத்துக் கொண்டு ஏராளமான நட்சத்திரங்களை களத்தில் இறக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகி பாபு, அஜ்மல், வைபவ், அரவிந்த் ஆகாஷ், இவானா, யுகேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
இதில் 2003 ஆம் ஆண்டு வசீகரா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. முழுக்க முழுக்க காதலைமையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த நேரத்தில் சுமாரான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – சினேகா இருவரும் இணைந்துள்ளனர். இது குறித்து பேசி உள்ள சினேகா, பட பூஜையின் போது விஜய்யை பார்த்து எப்படிங்க இப்படியே இருக்கீங்க என்று கேட்டேன். அவரும் இதே கேள்வியை என்னிடம் கேட்டார். படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் அழகாக இருக்கும். நிச்சயம் படத்தில் ரசிகர்கள் என்னை விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.





