கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் 20க்கும் குறைவான படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. அதிலும் 8 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை கடந்த படங்களாக இருந்தன. மற்ற சில படங்கள் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றன.
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் கெத்து தினேஷ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சுவாசிகா கீதா கைலாசம் பாலசரவணன் காளி வெங்கட் டிஎஸ்கே தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டி அதில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. யதார்த்தமான கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நேரில் ஒரு வாழ்வியலை பார்த்த அனுபவத்தை ரசிகர்கள் பெற்றனர் என்றால் அது மிகையல்ல.
குறிப்பாக இந்த படத்தில் கெத்து தினேஷ் மனைவியாக யசோதா கேரக்டரில் நடித்திருந்த சுவாசிகா பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கிரிக்கெட் விளையாட்டையே வாழ்க்கையாக கொண்ட தனது கணவனை திருத்த முடியாமல், மருமகனும் அதே போல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவனாக வருவதை ஏற்க முடியாமல் அவரது தவிப்பும் நடிப்பும் வேற லெவலில் இருந்தது.
லப்பர் பந்து படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் சுவாசிகாவுக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. இப்போது சூர்யா 45 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் சுவாசிகா, சூரி நடிக்கும் மாமன் படத்தில் சூரிக்கு அக்காவாக நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சுவாசிகா கூறியதாவது, தமிழில் நான் நடித்த முதல் படம் வைகை. கோரிப்பாளையம் சாட்டை ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறேன். தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் நடித்த படம்தான் லப்பர் பந்து. எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை இருக்கு. லவ்டுடே பட இயக்குனர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், என்று நடிகை சுவாசிகா கூறியிருக்கிறார்.





