துவக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக தனது கலகலப்பான வேகமாக பேச்சால் மக்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. அதன்பிறகு சில படங்களில் ஹீரோக்களுக்கு நண்பராக நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானார். மேலும் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச்களில் வர்ணனையாளராக பங்கேற்றும் மக்களிடம் மிகவும் பிரபலமானார்.
பிறகு எல்கேஜி படம் மூலம் படத்தின் நாயகனாக நடிக்கத் துவங்கிய ஆர்ஜே பாலாஜி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடவுளின் தூதுவர் என்ற பெயரில், ஆசிரமம் நடத்தி, மக்களை ஏமாற்றும் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரிக்க துடிக்கும் போலிச்சாமியார் பற்றிய கதையாக இந்த படம் இருந்தது.
அதே வேளையில் இந்த படத்தில் பக்தர்களின் மூட நம்பிக்கை, மனிதர்களின் தவறான கருத்துகள், கடவுளின் நிலை குறித்த சில விஷயங்களையும் ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார். அதிலும் மூக்குத்தி அம்மனாக வரும் நயன்தாராவின் நடிப்பு, மிகவும் பக்குவப்பட்டதாகவும் அதே வேளையில் மிகவும் அழுத்தமான ஒரு நடிப்பாகவும் அது இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு பிறகு வீட்ல விசேஷம் என்ற படத்தை இயக்கினார் ஆர்ஜே பாலாஜி, வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் 50 பிளஸ் வயதுகளை கடந்த அப்பா, அம்மா உள்ள சூழலில், அம்மா மீண்டும் கர்ப்பமாகிறார். அதனால் ஏற்படும் பிரச்னைகள், சங்கடங்களை சொல்லும் படமாக இது இருந்தது. இதில் சத்யராஜ் – ஊர்வசி, ஆர்ஜே பாலாஜியின் பெற்றோராக வேற லெவல் நடிப்பை தந்திருந்தனர்.
இந்த படத்துக்கு பிறகு கோகுல் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் பெரிய அளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம், ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படமான மூக்குத்தி அம்மன் படத்தை 2ம் பாகமாக எடுக்க, ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டு அதற்கான ப்ரீ புரடக்சன் பணிகளை துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்துக்கு மாசாணி அம்மன் என பெயர் வைத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இந்த 2ம் பாகம் படத்தில் மீண்டும் நயன்தாராவே மூக்குத்தி அம்மனாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நயன்தாரா இந்த படத்தில் நடிக்கவில்லை. திரிஷா நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வந்தது. பிறகு, சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்க இருப்பது திரிஷா தான். சமந்தா இல்லை. அவர் கேட்ட சம்பளம், கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாததால் குந்தவை திரிஷாவே இதில் மூக்குத்தி அம்மனாக நடிப்பது உறுதியாகி விட்டது.





