தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளா. அவர்களின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற படத்தில் அவர் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் என்ற படத்திலும் அவர் நாயகியாக நடித்தார். பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருமுறை வனிதா விஜயகுமார் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அப்போது அவர் செய்த அலப்பரைகளும் அட்ராசிடிகளையும் பார்த்து பார்வையாளர்கள் மிரண்டு போயினர். அடுத்து அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் பவிஷ் நாராயணன் நடிகை நாக துர்கா நடிப்பில் உருவான படம் லவ் ஓ லவ். இந்த படத்தில் இயக்குனர்கள் செல்வராகவன் கேஎஸ் ரவிக்குமார் நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் லவ் ஓ லவ் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா விஜயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, நான் ஒரு பழைய ஹீரோயின் என்பது போல் எனக்கு தோன்றவில்லை.
இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரபலமான நடிகை போல்தான் உணர்கிறேன். என்னுடைய முதல் ஹீரோ முதலமைச்சர் விஜய்தான். இன்று தமிழ்நாட்டின் சொத்து. நான் தமிழில் ஹீரோயினாக நடித்தது இரண்டு படங்கள் தான். அதிலும் விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் தான் முதல்முறையாக நான் அறிமுகமானேன்.
இன்றுவரை என்னை விஜய் பட ஹீரோயினாக தான் எல்லோரும் பார்க்கிறார்கள். இன்றைய குழந்தைகள் வரை என்னுடன் கனெக்ட் ஆனதற்கு காரணம் விஜய் தான். அதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது என்று வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் மீது தனக்கு கிரஷ் இருந்ததாகவும் ஒருமுறை வனிதா விஜயகுமார் கூறியது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.





