தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும். குறிப்பாக பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பழங்குடியின பெண்ணாக அழுத்தமான நடிப்பை தந்திருப்பார்.
அதே போல் முனி, காஞ்சனா 3, காவியத் தலைவன், காளை, மதராஸி, சக்கரக்கட்டி, மலை மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வேதிகா பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்துள்ள பேட்ட ராப் படத்திலும் வேதிகா நடித்திருக்கிறார்.
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற தெலுங்கு படம் நேற்று முன்தினம் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள், தேவரா படத்தின் வெளியீட்டை முன்னிட்டு கிடா வெட்டி அந்த ரத்தத்தை ஜூனியர் என்டிஆரின் போஸ்டர்கள், கட் அவுட்டுகளில் அபிஷேகம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது .
ரசிகர்களின் இந்த செயல்பாட்டை நடிகை வேதிகா கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது மிகவும் கொடுமையான செயல். அந்த பாவப்பட்ட குழந்தைக்காக என்னுடைய இதயம் ரத்தம் சிந்துகிறது. இதுபோன்ற சித்ரவதை, கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. குரலற்ற அப்பாவி ஜீவனை இப்படியா வதைப்பது,
அந்த அப்பாவிக்காக நான் பிரார்த்திக்கிறேன். அது இறைவனின் கைகளில் தஞ்சம் அடையட்டும். ரசிகர்களின் கொண்டாட்டம் என்ற பெயரில், இனிமேலும் இதுபோன்று எந்த ஜீவன்களையும் கொல்ல வேண்டாம். தயவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அந்த பதிவில் நடிகை வேதிகா வருத்தப்பட்டு தெரிவித்திருக்கிறார்.
வழக்கமாக தமிழ் சினிமாவில் தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தங்களது சந்தோஷத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஆனால் கிடா வெட்டி அதன் ரத்தத்தை எல்லாம் நடிகரின் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்வது எல்லாம் அபத்தத்தின் உச்சகட்டம் என்று இந்த வீடியோ பார்த்த பலரும் தங்களது அதிருப்தியான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.





