தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன். குறிப்பாக அக்கா அண்ணி அம்மா கேரக்டர்களில் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். எங்கேயும் எப்போதும் அரண்மனை 2 அப்பா அறம் தானா சேர்ந்த கூட்டம் தேவராட்டம் ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிகாரியாகவும், ஆண்டவன் கட்டளை படத்தில் வக்கீல் கேரக்டரிலும் இவர் நடித்துள்ளார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல திறமையான நடிகைகளில் இவரும் ஒருவர்.
அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் சமூகம், அரசியல் சார்ந்த தனது பதிவுகளை செய்து வரும் வினோதினி வைத்யநாதன் சில ஆண்டுகள் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன் அக்கட்சியை விட்டு அவர் விலகினார். கமல்ஹாசன் திமுகவுடன் இணைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இல்லாத நிலையிலும் தொடர்ந்து தனது சமூகம் அரசியல் சார்ந்த பார்வையை தனது வலைதள பக்கங்களில் தொடர்ந்து நடிகை வினோதினி வைத்தியநாதன் பதிவாக வெளியிட்டு வருகிறார். இந்த சூழலில் நடிகர் விஜய் குறித்து அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகை வினோதினி வைத்தியநாதன் கூறியிருப்பதாவது, நடிகர் விஜயை பொறுத்தவரை அனைத்தையும் மீறி கட்சி ஆரம்பித்திருக்கிறார். முதலில் அவருடைய கேரியர். அதில் கிடைக்கும் பெரிய சம்பாத்தியத்தை விட்டு விட்டு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை ஒரு பெரிய பிளான் செய்துதான் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவார்கள். இதற்கு முன்பு அவர் 15 ஆண்டுகளாக நலத்திட்டங்களை செய்திருக்கிறார். இன்று கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
அதனை தியாகமாக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் கடமையாக, சேவையாக பார்க்க வேண்டும். சினிமாவில் அவர் மீது எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. அதாவது அவர் மாதிரி ஒரு நல்ல டான்ஸர் கிடையாது. என்டர்டைன்மெண்ட் மற்றும் காமெடி எல்லாம் அவரை மாதிரி யாரும் செய்ய முடியாது. அதையெல்லாம் இப்போது அவர் விட்டு விட்டு வந்திருப்பதால் அவரது படங்களை இனி பார்க்க முடியாது என்பதுதான் எனக்கு வருத்தம் என்று வினோதினி வைத்தியநாதன் கூறியிருக்கிறார்.





