தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் எஸ்பி முத்துராமன். குறிப்பாக கடந்த 1980 90களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்பி முத்துராமன். இதுவரை நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் எஸ்பி முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் ரசனையை அறிந்து அதற்கேற்ற கதைக்களங்களில் படங்களை இயக்கியவர் எஸ்பி முத்துராமன். அவரது படங்களில் காதல் காமெடி சென்டிமென்ட் ஆக்சன் என எல்லாமே கலந்திருக்கும். அதனால் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே வெள்ளிவிழா படங்களாக தான் இருந்தன. குறிப்பாக ரஜினி கமல் படங்கள் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான பெரிய வெற்றியை பெற்றன.
குறிப்பாக முரட்டுக்காளை தர்மத்தின் தலைவன் வேலைக்காரன் மிஸ்டர் பாரத் குரு சிஷ்யன் நல்லவனுக்கு நல்லவன் அடுத்த வாரிசு போக்கி ராஜா பாயும் புலி மனிதன் என பல வெற்றிப் படங்களை ரஜினிக்கு கொடுத்தவர். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக எஸ்பி முத்துராமன் இருந்த போது எம்ஜிஆர் நடித்த சில படங்களிலும் அவர் பணிபுரிந்திருக்கிறார். அப்போது எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் எஸ்பி முத்துராமன் கூறியதாவது, ஒரு முறை ஸ்டுடியோ ஒன்றில் படப்பிடிப்பு தளத்தில் எம்ஜிஆர் நடந்து வந்துக்கொண்டு இருந்தார். நாங்களும் அவருடன் பேசிக்கொண்டே நடந்து வந்தோம். அப்போது அங்கே ஒரு தொழிலாளி தரையில் அமர்ந்து கலர் காகிதங்களை கூழில் தொட்டு ஒட்டிக்கொண்டு தோரணமாக கட்டிக்கொண்டு இருந்தார்.
அவரையே சில நொடிகள் பார்த்த நடிகர் எம்ஜிஆர் அவரை ஓடிப்போய் கட்டிப் பிடித்துக்கொண்டார். அந்த தொழிலாளி அப்படியே நடுங்கிப் போய்விட்டார். நாங்கள் எல்லாம் ஆச்சரியமாக பார்த்தோம். சில நிமிடங்கள் இருவருமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். பிறகு எம்ஜிஆர் தன்னுடைய உதவியாளரை அழைத்து, இவரை என்னுடைய மேக்கப் அறையில் உட்கார வை பிறகு நான் வருகிறேன் என்று கூறி அனுப்பி விட்டார்.
அதன்பிறகு எங்களிடம் பேசிய எம்ஜிஆர், நான் ஆரம்பத்தில் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நான் நடித்துக்கொண்டிருந்த போது அவர் அந்த நாடகங்களில் கதாநாயகனாக நடித்தவர். ஒரு நடிகருக்கு வந்த நிலையை பார்த்தீர்களா என்று எம்ஜிஆர் ஆதங்கப்பட்டார். அப்படி தன்னுடன் பழகிய மனிதர்களை எந்த நிலையிலும் மறக்காதவர் எம்ஜிஆர் என்று அந்த விழாவில் எஸ்பி முத்துராமன் பேசினார்.





