அஜித்குமாரின் 63 வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். குட் பேட் அக்லி என தலைப்பு வைக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. திரிஷா பிரபு அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இருப்பினும் அஜித்தை பிரதானப்படுத்தியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
அர்ஜுன் தாசுக்கும் ஓரளவு முக்கியமான கதாபாத்திரத்தையே கொடுத்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஏற்கனவே இதற்கு முந்தைய திரைப்படமான விடாமுயற்சி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் காரணமாக ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் எதிர்பார்ப்பாக அமைந்தது குட் பேட் அக்லி திரைப்படம்.
இதை எதிர்பார்ப்பை ஆதிக் ரவிச்சந்திரன் ஓரளவு பூர்த்தி செய்து விட்டார் என்றே கூறலாம். முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த மசாலா திரைப்படமாக அவர் அதனை எடுத்திருந்தார். எந்த ஒரு இடத்திலும் லாஜிக் என்ற ஒரு விஷயத்தை பார்க்காமல், அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே இந்த திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார்.
போதாக்குறைக்கு படத்தின் பல இடங்களிலும் ரெட்டோ பாடல்களை அள்ளித் தூவி இருந்தார். இத்தனை பாடல்கள் தேவைதானா என்று ரசிகர்களை கேட்கும் அளவிற்கு படத்தில் அது இடம்பெற்று இருந்தது. அனைத்து தரப்பினரையும் இந்த திரைப்படம் கவரவில்லை என்றாலும், திரையரங்குகளில் ஒரு முறை சென்று பார்க்கக்கூடிய படமாகவே குட் பேட் அக்லி அமைந்தது.
கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். இப்படியான சூழலில் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், அக்டோபர் மாதம் தனது அடுத்த திரைப்படத்தில் பணியாற்ற இருக்கிறார். இந்தத் திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா வருகிறார்.
இந்த திரைப்படத்தின் கதையை எனக்காக எழுத வேண்டாம். நான் உங்கள் கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் குமார் ஏற்கனவே கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரனும், தனது முந்தைய திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காக இருந்தது, தற்போது இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரும் விரும்பும் பொழுதுபோக்கு படமாக அமையும் என்று கூறி இருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.





