நடிகர் அஜீத்குமார் படங்கள் திரைக்கு வரும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். ரஜினி கமல் விஜய் வரிசையில் அடுத்ததாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு டாப் ஸ்டார் நடிகராக அஜீத்குமார் இருந்து வருகிறார். அவரது நடிப்பில் உருவான குட்பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
ஆனால் நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை சினிமாவில் நடிப்பதோடு அவரது பணி முடிந்து விடுகிறது. படம் திரைக்கு வருவதற்கு முன் மற்ற நடிகர்கள் போல டீசர் ரிலீஸ் டிரெய்லர் ரிலீஸ் இசை வெளியீட்டு விழா என எந்தவிதமான பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக்கொள்வது இல்லை. இது ஒரு விதத்தில் படத்துக்கு பின்னடைவாக தான் இருக்கிறது.
வழக்கமாக ரஜினி கமல் விஜய் போன்ற பெரிய நடிகர்களே இதுபோன்ற பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு படத்துக்கு விளம்பரம் செய்கின்றனர். சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் படத்துக்கு நடிகர் சியான் விகரம் பல நகரங்களுக்கு நேரில் சென்று பிரமோசன் செய்தார். படம் திரையிட்ட தியேட்டர்களுக்கும் நேரில் விசிட் செய்து ரசிகர்களை சந்தித்தார்.
குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் என்ற முறையில் ஆதிக் ரவிச்சந்திரன் மட்டுமே அவ்வப்போது நேர்காணல்களில் பங்கேற்று படம் குறித்து பேசி வருகிறார். குட் பேட் அக்லி படம் குறித்த சுவாரசியமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். படத்தின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரும் அவ்வப்போது குட் பேட் அக்லி படம் குறித்து அப்டேட் தருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, இந்த படத்துக்கு குட் பேட் அக்லி என்று டைட்டில் சொன்னதே அஜீத் குமார் சார்தான். அஜீத் சாருடன் ஒருமுறை அமர்ந்து இருந்த போது படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
படத்தில் 3 விதமான கேரக்டர் என்பதால் யோசித்த போது அவரே குட் பேட் அக்லி எப்படி இருக்கு என்றார்.
சார் பயங்கரமா இருக்கு சூப்பரா இருக்கு சார் என்று சொன்னேன். சும்மா சொல்லாதீங்க என்றார். இல்லே சார், உண்மையாகவே சூப்பரா இருக்கு. இப்பவே அதை லாக் பண்ணிடுவோம் என்று சொன்னேன். அப்போதே படக்குழு சார்ந்தவர்களிடம் அந்த டைட்டிலை போன் பண்ணி சொன்னேன். அவர்களும் ரொம்பவும் சந்தோஷமாகி டைட்டில் சூப்பராக இருக்கிறது என்று கூறிவிட்டனர் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் டைட்டில் இப்போது ஜி பி யூ என்று 3 ஆங்கில எழுத்துகளில் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.





