இன்று ஆளுங்கட்சியாக அல்லது எதிர்கட்சியாக இருந்துவிட்டால் போலீஸ் ஸ்டேஷன்களில் அவர்களது ராஜ்யம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அவர்களது கட்டளைக்கு போலீஸ் அடிபணிய ஒரு சூழல் பல ஆண்டுகளாகே நீடிக்கிறது. கடமையை செய்ய அரசு துறை அதிகாரிகள் அரசியல் கட்சிகள் விடுவதில்லை. ஆனால் எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ஒருமுறை சென்னையை சேர்ந்த அதிமுகவினர் ராமாவரம் தோட்டத்துக்கு கூட்டமாக வந்து அங்கு இருந்த முதலமைச்சர் எம்ஜிஆரை சந்தித்தனர். அப்போது எம்ஜிஆர் என்ன விஷயம் என்று கேட்க, தலைவரே எங்கள் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு புது இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு நம் கட்சியினர் என்றாலே வெறுப்பு அதிமுகவினர் என்றாலே அடிக்கிறார் என்று கூறியிருக்கின்றனர்.
மேலும் வேண்டும் என்றே அவர் எங்கள் மீது பொய் வழக்குகள் போடுகிறார் என்றும் கோரஸாக அவர்கள் எம்ஜிஆரிடம் புகார் கூறினர். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட எம்ஜிஆர், நீங்க என்ன பண்ணினிங்க? என்று கேட்க, நாங்க எல்லாம் ஒண்ணுமே பண்ணலே தலைவரே என்று கூட்டம் பம்மியிருக்கிறது.
அப்போது எம்ஜிஆர் அங்கு இருந்தவர்களிடம், அந்த ஸ்டேஷனில் இருந்த ஹெட் கான்ஸ்டபிளை அடித்தது யார் என்று கோபமாக கேட்டிருக்கிறார். யாருமே பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தனர். அப்போது எம்ஜிஆர் நான் ஒரு முதலமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் வந்துவிடும். நீங்க தப்பு பண்ணீட்டு போலீஸ் மேல பழியை போடறீங்களா?
போலீஸ்காரங்களும் மனுஷங்கதான். போலீஸ் அவங்க கடமையை செய்ய விடாமல் நீங்க போய் தொந்தரவு பண்றீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சிக்காரங்களை பழிவாங்கறதா என்கிட்டயே சொல்றீங்க? நாம ஆளுங்கட்சியாக இருக்கலாம். ஆனால் நிர்வாகம் என்பது பொதுவானது. அரசு அதிகாரிகளை மதிக்கணும். அவங்க பணியில் கட்சிக்காரங்க குறுக்கிட கூடாது.
தப்பு பண்ணிட்டு யாராவது என்கிட்ட சிபாரிசுக்கு வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஜாக்கிரதையாக இருங்க என்று காட்டமாக பேசியிருக்கிறார் எம்ஜிஆர். அரண்டு போன கூட்டம் எம்ஜிஆருக்கு பெரிய கும்பிடு ஒன்றை போட்டுவிட்டு நான்கு அடி பின்வாங்கி மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களை நில்லுங்க என்று அதட்டிய எம்ஜிஆர், எல்லோரும் இருந்து சாப்பிட்டுட்டு போங்க என்று அன்பாக கூறியிருக்கிறார். அவர்தான் எம்ஜிஆர்.





