கடந்த 1994ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஆனால் 30 ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் அவரை உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றுதான் ரசிகர்கள் அன்போடு ஆசையோடு அழைத்துக்கொண்டு இருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்த அவரை பார்த்து, இன்னும் இவர் உலக அழகிதான் என பாராட்டினர்.
இந்தியில் தமிழில் பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அதன்பிறகு ரஜினியுடன் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் ராவணன் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தும் குறிப்பிட்ட படங்களில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து மட்டுமே நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் ரசிகர்களை வெகுவாக ஐஸ்வர்யா ராய் கவர்ந்தார்.
பாலிவுட் சீனியர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். தனது நடிகர் அபிஷேக் பச்சனுடன் குரு தூம் 1 தூம் 2 குச் நா காஹோ தாய் அக்ஷார் பிராம் ஹே போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார்.
ஆனால் இயக்குனர் பராகான் இயக்கத்தில் 2014ம் ஆண்டில் வெளியான ஹேப்பி நியூ இயர் என்ற படத்தில், தனது கணவர் அபிஷேக் பச்சன் நடித்த அந்த படத்தில் மட்டும் நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்துவிட்டார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, சுவாரசியமான திரைக்கதை கொண்ட ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்க என்னிடம் கேட்டனர். நானும் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.
ஆனால் இந்த படத்தில் எனக்கும் அபிஷேக் பச்சனுக்கும் சங்கடமான சில சூழல்கள் இருந்தன. நாங்கள் இருவரும் ஒன்றாக நடிப்பதற்கு பதிலாக நான் வேறு ஒரு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டி இருந்தது. இந்த தர்ம சங்கடமான சூழலை தவிர்க்கவே அந்த படத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த நிலையில், அவர் நடிக்க மறுத்துவிட்டதால் அதன் பிறகு தீபிகா படுகோன் அந்த படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





