இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன் நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். கஸ்தூரி ராஜா குடும்பம், ரஜினிகாந்த் குடும்பம் சம்மதத்துடன், இரு வீட்டார் இணைந்து இந்த திருமணத்தை ஜாம் ஜாம் என நடத்தி வைத்தனர்.
18 ஆண்டுகள் இருவரும் திருமண வாழ்க்கை நடத்திய நிலையில் யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் இந்த நட்சத்திர தம்பதிக்கு உள்ளனர். இருவருமே பெரிய பையன்களாக வளர்ந்தும் விட்டனர். தனுஷ் இயக்கி நடித்து வரும் தனது 50வது படம் ராயன் படத்தில், தனது மூத்த மகன் யாத்ராவை, நடிக்க வைத்திருப்பதாக ஒரு தகவலும் உள்ளது.
மகிழ்ச்சியாக நீடித்த குடும்ப வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டு, கடந்த 2022ம் ஆண்டில், தங்களது டிவிட்டர் பக்கத்தில் தனது கணவர் தனுஷை பிரிவதாக ஐஸ்வர்யாவும், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷூம் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் மட்டுமின்றி சினிமாத்துறை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தனர்.
குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவிக்குள் இதுபோன்ற சண்டை சச்சரவுகள், பிணக்குகள் ஏற்படுவது சகஜம்தான். மிக விரைவில் மன வேற்றுமைகளை களைந்து இருவரும் இணைந்து விடுவார்கள். வளர்ந்த பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதியாவது, தங்களது முடிவை மாற்றிக்கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் திடீரென நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே மனுதாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் இருவருமே நிரந்தர பிரிவுக்கு தயாராகி விட்டனர். சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் என்ற உறவை முறித்துக்கொள்ள தனுஷ் ரெடியானது, ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு மத்தியில், விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2004ம் ஆண்டில் நடந்த தங்களது திருமணத்தை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என, கேட்டுள்ளார். ஏமாற்றியோ, பொய் சொல்லியோ, திருமணம் ஆனதை மறைத்தோ, நோய்கள் இருப்பதை மறைத்தோ தனுஷ் தன்னை திருமணம் செய்திருந்தால்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படி சொல்லி விவாகரத்து கேட்க வேண்டும். தனுஷை விட 5 வயது மூத்தவரான ஐஸ்வர்யா, 2 பிள்ளைகளுக்கு தாயாகி 18 ஆண்டுகள் தனுஷூடன் குடும்பம் நடத்திய நிலையில், திருமணம் செல்லாது என அறிவிக்க கோருவது வேடிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.





