தமிழ் சினிமாவில் மிக குறைவான திரைப்படங்களை கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் வினோத். இவரது முதல் திரைப்படம் சதுரங்க வேட்டை. இங்கு பணத்தை மையப்படுத்தியோ, கதாநாயகன் ஏமாற்றுவது போன்று எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் அவற்றுக்கு எல்லாம் முதன்மை திரைப்படமாக அமைந்தது தான் சதுரங்க வேட்டை.
ஒரு இடத்தில் வித்தியாசமான முறையில் ஏமாற்று வேளை நடைபெறுகிறது என்றால் அதை சதுரங்க பட பாணியில் என்று சொல்லிதான் ஆரம்பிப்பார்கள். அந்த அளவுக்கு அந்த திரைப்படம் மக்களிடையே ஒன்றிப்போனது. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் படத்தில் இடம் பெற்ற வசனங்கள்.
கோழிக்கு பரிதாபப்பட்டால் சிக்கன் 65 சாப்பிட முடியாது, மணி இஸ் தி ஆல்வேஸ் அல்டிமேட் உள்ளிட்ட வசனங்கள் கவனம் பெற வைத்தது மட்டுமல்லாமல், ரசிகர்களிடையே எளிதாக போய் சேர்ந்தன. இதற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கிய தீரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
தமிழக காவல்துறையில் உண்மையில் நடந்த ஒரு கதையை மையமாக வைத்து இதன் திரைக்கதையை எழுதி இருந்தார் வினோத். இயக்குனரின் திரையுலக பயணத்திலேயே அவருக்கு மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூறலாம். அந்த அளவுக்கு அந்த திரைப்படம் மிகவும் டீடைல் ஆக இருக்கும். இதனை தொடர்ந்து அஜித் உடன் அவர் இணைந்தார்.
நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு என அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை கொடுத்தார். இதில் நேர்கொண்ட பார்வை ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. வலிமை திரைப்படம் தோல்வியடைந்தது. துணிவு திரைப்படம், வசூலை வாரி குவித்தது. இருப்பினும் இந்த மூன்று திரைப்படங்களுமே வினோத்தின் பழைய இயக்கம் போல் இல்லை என்று பலரும் கூறி வந்தனர்.
இதனிடையே, தற்போது விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கி வருகிறார் வினோத். இதற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், தன்னால் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஒரு கதையை ரெடி பண்ணவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார். சாதாரண ஒரு விஷயத்தையும் நகைச்சுவையாக மாற்றும் பண்பு அவருக்கு உண்டு, அது எனக்கு வரவே வராது என்று கூறியிருக்கிறார். ஒருமுறை சிவகார்த்திகேயனை சந்தித்தபோது நானே அவரிடம் ஒரு கதையை கூறுங்கள் இயக்குகிறேன் என்று தெரிவித்தேன் என ஹெச்.வினோத் சொல்லி இருக்கிறார்.





