நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையன்று வெளியானது. கடந்த 19 மாதங்களாக அவரது படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படமும், அதன்பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படமும் வெளியாக இருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற போஸ்டர்கள் அடிக்கடி வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இது 1997ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் படம் பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான். மனைவியை வில்லன்கள் கடத்திவிட, அவர்களுடன் போராடி கதாநாயகன் தனது மனைவியை மீட்பதுதான் கதை.
இந்த படத்தில் அஜீத்குமார் ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். வில்லனாக அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு, அஜர்பைஜானில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இங்கு கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற 13ம் தேதியுடன் இங்கு படப்பிடிப்ப முடிவடைய இருக்கிறது.
அதன்பிறகு ஸ்பெயின் நாட்டில், அஜீத்குமார் திரிஷா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றும் எடுக்கப்பட இருக்கிறது. அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்க இருக்கிறது. வருகிற தீபாவளி பண்டிகைக்கு அதாவது, வருகிற அக்டோபர் 31ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு அனைத்து வேலைகளையும் முடித்து படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டும்.
இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில்தான் இப்போது நடந்து வருகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் விடாமுயற்சி சண்டைக்காட்சிகளில் அஜீத்குமார் பங்கேற்று நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் குட்பேட் அக்லி படப்பிடிப்பில், நடிகர்கள் சுனில் மற்றும் நட்டி பங்கேற்றுள்ள காட்சிகளை ஆதிக் ரவிச்சந்திரன் படம்பிடித்து வருகிறார். விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்த பிறகு, வருகிற 20ம் தேதி முதல் குட்பேட் அக்லி ஷூட்டிங்கில் அஜீத்குமார் பங்கேற்க உள்ளார். இப்படி அஜீத்குமார் நடிப்பில் இரண்டு படங்களுமே உருவாகி வருவது ஏகே ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.





