அஜித் தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

நடிகர் அஜித் தனது தொடக்க காலகட்டத்தில் இருந்தே பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்தில் அவரது பல திரைப்படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. “அஞ்சநேயா”, “ஜனா’, “ஜி”, “பரமசிவன்”, “ஆழ்வார்” போன்ற திரைப்படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.
இதில் “ஜி” திரைப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் அஜித்குமார் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். வித்யாசாகர் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “டிங் டாங் கோவில் மணி” பாடல் இப்போதும் ரசிகர்களால் முணுமுணுக்கப்படும் பாடலாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு முக்கியமான தகவல் ஒரு நேர்காணலில் லிங்குசாமி பகிர்ந்துளளர். அதாவது “ஜி” திரைப்படத்தில் முதலில் சித்தார்த் அல்லது மாதவனை நடிக்க வைக்கலாம் என்று யோசித்திருந்தாராம் லிங்குசாமி. அதன்படி மாதவனை அணுகியபோது அவர் இந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பிறகுதான் அஜித்திடம் இந்த கதையை கூறியிருக்கிறார். இதில் அஜித்தின் கதாப்பாத்திரத்தை குறித்து அவரிடம் விவரிக்கும்போதே அஜித்திற்கு இத்திரைப்படம் வெற்றியடையும் என நம்பிக்கை இல்லையாம். அதுவும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் லிங்குசாமி அஜித்திடம் கதையை கூறினாராம். “இந்த படம் எனக்கு செட் ஆகாது” என்று அஜித் வெளிப்படையாகவே கூறிவிட்டாராம். எனினும் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அஜித். இறுதியில் அஜித் கணித்தது போலவே அந்த படம் தோல்வியை சந்தித்தது.





