அஜித் குமாருக்கு இந்த ஆண்டு மட்டும் இரண்டு படங்கள் வெளியாகி விட்டன. இதில் கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் திரிஷா அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து இருந்தனர். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் அதனை சரிவர பூர்த்தி செய்யவில்லை.
அஜர்பைஜான் நாட்டில் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது காட்சி ரீதியாக பெரும்பலமாக அமைந்தாலும், அது திரைக்கதைக்கு சற்றும் உதவவில்லை. மிக முக்கியமாக அஜித்திற்கான மாஸ் காட்சிகள் ஏதுமில்லாததும் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. சொல்லப்போனால் அஜித் ரசிகர்களுக்கே அந்த திரைப்படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படியான சூழலில் இரண்டு மாதங்கள் கழித்து அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியிடப்பட்டது. அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருந்தது. மைத்திரி மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது.
அஜித் குமாரை புகழ்ந்து பாடும் காட்சிகள் அல்லது அஜித் குமாரே தன்னை புகழும் காட்சிகள்தான் படம் முழுக்க இடம்பெற்றிருந்தன. படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை மசாலா ரகமாக அமைந்திருந்தது. இதன் காரணமாக குட் பேட் அக்லி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.
இப்படி அஜித்துக்கு கடைசி திரைப்படம் வெற்றியாக அமைய தற்போது அவர் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற ரேஸில் அவர் பங்கேற்றார். அதேசமயம் அவர் மீண்டும் திரைப்படங்கள் மீது கவனம் செலுத்த இருக்கிறார். தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு மே மாதம் இது வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்தத் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அஜித் குமாரிடம் நான்கு பேர் கதை கூறியதாகவும் இதில் அவர் ஆதிக் ரவிச்சந்திரனையே தேர்வு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய திரைப்படத்தைப் போலவே இதுவும் கேங்ஸ்டர் பாணியில் உருவாக இருக்கிறதாம். வேல்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளதாம். அஜித் நடித்திருக்கும் திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாவதாக சொல்லப்படுகிறது.





