நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கும் நேராக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் அனைத்து பணிகளையும் முடிவு பெற்றதை புகைப்படத்துடன் படக்குழு வெளியிட்டது. தற்போது ஹைதராபாத்திற்கு படக்குழு சென்றுள்ளது.
அங்கு இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக அஜித் மற்றும் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக இன்னும் 20 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, பின்னர் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மகிழ் திருமேனி இயக்க, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் முழுக்க முழுக்க ராவான ரவுடியாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது கெட்டப் முதல் அத்தனையும் மாற்றி இருக்கிறார் ஆதிக். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் 65 ஆவது திரைப்படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கேஜிஎப் என்னும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த பிரசாந்த் நீல்லுடன் தான், அவர் இணைய இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவருடன் இரண்டு படங்களில் அஜித் பணி புரிய இருப்பதாகவும், அதில் ஒன்று கேஜிஎப் 3யாக என்று பேசப்பட்டது.
இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பிரசாந்த் நீல் மற்றும் அஜித் குமார் இடையேயான சந்திப்பு நடைபெற்றது உண்மைதான் என்று கூறியிருக்கிறார். இருவரும் எதிர்காலத்தில் இணைந்து படத்தில் பணியாற்றலாம் என்று தெரிவித்திருக்கும் அவர், கே ஜி எஃப் நாயகன் யாஸ் உடன் அஜித்குமார் இணைய போவதாக வெளியாகி இருக்கும் தகவலின் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.





