இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மிக கவனம் பெற்ற ஒரு படைப்பாளியாக இருக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி அஞ்சாதே நந்தலாலா துப்பறிவாளன் சைக்கோ போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அடுத்து அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் வெளியாக உள்ளது.
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மிஷ்கின் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சவரக்கத்தி மாவீரன் லியோ வணங்கான் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் பொது நிகழ்ச்சிகளில் அவர் சர்ச்சையாக பேசி அடிக்கடி விமர்சனங்களில் சிக்கிக் கொள்கிறார்.
சமீபத்தில் பாட்டல் ராதா என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன் லிங்குசாமி அமீர் பா ரஞ்சித் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் உள்பட செய்தியாளர்களும் திரளாக பங்கேற்றனர். இதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் பல கெட்ட வார்த்தைகளை, ஆபாச வார்த்தைகளை இடையிடையே பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மிஷ்கின் இப்படி மேடை நாகரிகமின்றி பொதுவெளியில் ஆபாச வார்த்தைகளை பேசிய பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் பேடு கேர்ள் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின் கூறியதாவது, பாடலாசிரியர் தாமரை லெனின் பாரதி லட்சுமி ராமகிருஷ்ணன் சசிகுமார் நடிகர் அருள்தாஸ் தயாரிப்பாளர் எஸ் தாணு ஆகியோருக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நகைச்சுவைக்கு மனிதன் பொய்யாக சிரிக்க முடியாது. அவனது ஆழ்மனதிலிருந்து தான் சிரிக்கிறார். அன்று நான் பேசியதும் அப்படிதான். நான் செய்த நகைச்சுவையில் பத்திரிகையாளர் உட்பட அனைவரும் சிரித்தனர். அப்படி பேசும் போது சில அவதூறான வார்த்தைகள் வந்துவிட்டது. அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மேடை நாகரிகம் வேண்டும் என சொல்கிறார்கள். நான் கூத்து கலைஞர்கள் இருக்கும் மேடையில் நின்று பேசுகிறேன். சங்க கால நாடகங்களில் வசைவு வார்த்தைகளை வைத்து பாடுவது இல்லையா, திருக்குறளில் காமத்துப்பால் அகராதி இல்லையா, ஒரு படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்று ஆபாச டைட்டில் வைக்கப்படுகிறது. அதை யாரும் கேட்பதில்லை. சினிமாவையும் மனிதர்களையும் நேசித்துக் கொண்டே இருப்பவன் நான் என மிஷ்கின் பேசியிருக்கிறார்.





