கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஓடிடி நிறுவனங்களின் குறுக்கீடு அதிகரித்து வருகிறது. பல கோடி ரூபாய் விலை கொடுத்து படங்களை வாங்கும் ஓடிடி நிறுவனங்களுக்காக தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்கள் தரப்பில் என்ன சொன்னாலும் தலையாட்டி பொம்மை போல கேட்டுக்கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க கூடாது. ஆங்கில பெயர் வைத்தால்தான் மற்ற மாநிலங்களில் படம் ஓடிடியில் ஓடும் என்று சொன்னதால் தமிழ் படங்களுக்கு டூரிஸ்ட் ஃபேமிலி ரெட்ரோ தக்லைஃப் என பெயர் வைத்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும் ஓடிடி நிறுவனங்கள்தான் தமிழ் படங்களின் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்கும் அளவுக்கு நிலமை மோசமாகி விட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது, தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
படத்தின் வெளியீட்டு தேதியிலிருந்து 100 நாட்களுக்குப் பின்புதான் ஓடிடியில் படம் வெளியிட வேண்டும் என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளோம். அப்படிப்பட்ட படங்களுக்கு மட்டுமே இனி தியேட்டர்கள் சார்பில் ஒத்துழைப்பு தரப்படும். வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து பூஜை போடும் படங்களுக்கு இது பொருந்தும்.
இப்போது ஓடிடி தளங்கள்தான் படத்தின் ரிலீஸை முடிவு செய்கிறார்கள். கடந்த 3 மாதங்களாக எந்த படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கவில்லை. பெரிய ஹீரோக்கள் நடித்த 5 படங்கள் கூட இன்னும் ஓடிடி வாங்கவில்லை. தீபாவளிக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. இதற்கு ஓடிடி ஆதிக்கமே காரணம்.
தியேட்டரில் வெளியான படங்கள் 28 நாட்களில் ஓடிடி ரிலீஸ் என்ற இப்போதைய நடைமுறையால் நெருக்கடி ஏற்படுகிறது. தயாரிப்பாளர்கள்தான் ரிலீஸ் தேதியை இனிமேல் வரையறை செய்ய வேண்டும். அப்போதுதான் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சினிமா டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது என்று திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசியிருக்கின்றனர்.





