கோவையை அடுத்துள்ள சூலூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, கோவை பகுதிக்கு உட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது.
சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்போடு இக்கொடூரத்தை கடந்து போக முடியாது.
கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளானது. அவை ஆட்சி மாற்றத்தில் சரி செய்யப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது. தவெக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகியிருந்தாலும் இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன் வைக்க முடியாது.
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இதை எல்லா விதங்களிலும் அணுகி அதற்கான ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம் என்று இயக்குனர் பா ரஞ்சித் அந்த பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.





