தமிழின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் 600 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் அப்படத்தை தயாரிக்கிறது. படத்துடைய ஷூட்டிங்கின் இரண்டு ஷெட்யூல்கள் இதுவரை முடிந்திருக்கின்றன.
இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். விஜய்யும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் தன்னுடைய செயல்பாடுகளை அமைத்துவருகிறார். மாணவ, மாணவிகளை சந்திப்பது, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர படிப்பகத்தை திறப்பது என அவரது நடவடிக்கைகள் அரசியல் நோக்கியதாகவே இருக்கிறது.
அவரது இந்த தொடர் நடவடிக்கைகளை பார்க்கும் பலரும் 2026ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று அறுதியிட்டு கூறுகின்றனர். ஆனால் விஜய் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதையும் சொல்லவில்லை. இந்நிலையில் நடிகர் ஆனந்த்ராஜ் விஜய்யின் அரசியல் குறித்து பேசுகையில், “தமிழ் சினிமாவில் விஜய்தான் இப்போதைக்கு வியாபார ரீதியாக நம்பர் ஒன் என்ற இடத்தில் இருக்கிறார்.
லியோ சக்சஸ் மீட்டில் அவரது பேச்சை நான் பார்த்தேன். புரட்சித் தலைவர் என்ரால் அது எம்ஜிஆர்தான்; நடிகர் திலகம் என்றால் அது சிவாஜிதான்; சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான்; உலக நாயகன் என்றால் அது கமல்தான் என்று பேசியிருந்தார். இப்படி பேசியதற்காக அவருக்கு நான் முதலில் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். அவரவர் பட்டம் அவர்களிடம்தான் இருக்க வேண்டும்.
சினிமாவில் விஜய்தான் நம்பர் ஒன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பல முயற்சி எடுத்து தடைகளை தாண்டி விஜய்யை அவரது அப்பா இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். விஜய்யும் பல கஷ்டங்களை தாண்டியிருக்கின்றார். அதனால் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரின் இஷ்டம். ஆனால் அரசியலுக்காக அவர் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
ஒரு நடிகருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும்போது அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வு அரசியலாகத்தான் இருக்கும். இதைத்தான் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் செய்தனர். இப்படி கலைத்துறையில் இருப்பவர்கள்தான் பின்நாட்களில் அரசியலுக்கு சென்றார்கள். இருந்தாலும் விஜய் அரசியல் எண்ட்ரி குறித்து என்னால் எதையும் உடைத்து பேச முடியாது. அதுதொடர்பாக அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.





