ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான லால் சலாம் திரைப்படம் தோல்வியடைந்தது. தொய்வான திரைக்கதை காரணமாக அந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் யாரும் வரவேற்பு கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது வேட்டையன் மற்றும் கூலி என அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த். இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. தங்கக் கடத்தலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அனேகமாக இதன் சூட்டிங் ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பணிகளை தொடங்குவதற்காக தற்போது அவர் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கிட்டத்தட்ட இதன் சூட்டிங் பணிகள் 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் ஆரம்பித்த படப்பிடிப்பு திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே, இந்தத் திரைப்படத்திலும் முக்கியமான நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.
மலையாளத்திலிருந்து பகத் பாசில் மஞ்சுவாரியார் ஆகியோர் வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர். இதில் பகத் பாசிலுக்கு காமெடி கலந்த கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதே போல் தெலுங்கு நடிகர் ராணா படத்தில் வில்லனாக நடிக்கிறார். ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
கல்வித்துறையில் நடைபெறும் ஊழலை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வேட்டையன் திரைப்படத்தில் பிரம்மாண்ட முறையில் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அவர் ரஜினியுடன் இணைந்து அந்தப் பாடலில் நடனமாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





