வாழை திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது, பைசன் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து, மாரி செல்வராஜ் பைசன் திரைப்படத்தைதான் எடுப்பதாக இருந்தது.
ஆனால் அந்த சமயத்தில் மாமன்னன் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அதற்கான பணிகளில் மாரி செல்வராஜ் கவனம் செலுத்த சென்று விட்டார். பிறகு கிடைத்த சிறிய இடைவெளியில் அவர், வாழை திரைப்படத்தையும் எடுத்து முடித்து விட்டார். இந்த இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றியைப் பெற்று மாரி செல்வராஜிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
அதே சமயம் இந்த இடைவெளியில் எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் துருவ் விக்ரம். கபடியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் பைசன் திரைப்படத்தில் அந்த விளையாட்டிற்காக முழு நேர பயிற்சியில் அவர் ஈடுபட்டார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக அவர் கபடி பயிற்சியில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் துருவ் விக்ரமின் தந்தை சீயான் விக்ரம் பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையைதான் இந்த திரைப்படம் மையமாக கொண்டு எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இதுபோக ரஜிஷா விஜயன் இருக்கிறார்.
பசுபதி, கலையரசன் மற்றும் லால் என முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் குறித்து அனுபமா பரமேஸ்வரன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், பைசன் திரைப்படம் மாரி செல்வராஜின் திரைப்படங்களிலேயே மிகவும் சிறந்த படமாக அமையும்.
எனக்கு அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே பரியேறும் பெருமாள் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயம் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. மாமன்னன் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் என்னால் அதில் ஈடுபட முடியவில்லை. இந்த நிலையில்தான் மாரி சார் என்னை பைசன் திரைப்படத்தில் அழைக்க அதை நான் பயன்படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.





