ஒரு சிறந்த நடிகராக திறமை இருந்தாலும், நல்ல இயக்குனர்களின் படங்களில் நடித்தால் மட்டுமே ஒரு கதாநாயகனுக்கு உரிய அங்கீகாரம் ரசிகர்களிடம் கிடைக்கிறது. இல்லை என்றால், பல நேரங்களில் மிக மோசமான இயக்குனர்களின் படங்களில் நடித்து, அந்த நடிகரின் திறமை, நாளடைவில் வெளிச்சத்துக்கு வராமலேயே போய் விடுகிறது.
அந்த வகையில் நடிகர் முரளியை போலவே, அவரது மகன் அதர்வாவும் மிக திறமையான நடிகர்தான். பல படங்களில் அவரது திறமை பளிச்சென வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக டைரக்டர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் ஒட்டுப்பொறுக்கியாக நடித்த அதர்வாவின் நடிப்பு, என்றென்றும் அவரை பாராட்டத் தூண்டும் அளவுக்கு ஆகச் சிறந்த நடிப்பை தந்திருந்தார்.
அதிலும் அவர் நாயன்மாரே என்று கூவியபடி பறை அடிக்கும் கேரக்டரில் அதர்வா வாழ்ந்து காட்டியிருந்தார். ஒரு வளரும் இளம் கலைஞர் அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடிப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. தன் தந்தை முரளியை போல, தானும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதை அதில் அதர்வா நிரூபித்திருந்தார்.
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா அதன்பிறகு ஈட்டி, பரதேசி, இமைக்கா நொடிகள், 100, சண்டிவீரன் என பல படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய போதும், அவருக்கான கதைகள் இல்லாததால் சில ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ரஜினி போன்றவர்களே ஆண்டுக்கு 3 படங்கள் தருகிற நிலையில், அதர்வா போன்ற சிறந்த இளம்நடிகர்கள் நிறைய படங்களில் நடிப்பதே அவர்களது வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும்.
இந்நிலையில் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் அமெரிக்காவில்தான் நடக்கிறது. ஏனெனில் கதைக்களமே அமெரிக்கா தான். அமெரிக்காவிலேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர்.
இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியிருப்பவர் பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜூதான். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கும் அவர் ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படி தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாரா மமிதா பைஜூவாக தான் இருப்பார் என்ற பேச்சு கோலிவுட்டில் எழுந்துள்ளது.





