இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. பிறகு சின்ன வீடு படத்தில் கே பாக்யராஜூக்கு அம்மாவாக நடித்திருப்பார். பிறகு பல படங்களில் நடித்த அவர் பிறகு கவுண்டமணி செந்தில் எஸ்எஸ் சந்திரன் போன்றவர்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் காமெடியாக நடிகையாக இருந்து நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக சதிலீலாவதி படத்தில் நடித்தவர் என்ற பெருமையும் கோவை சரளாவுக்கு உண்டு. இப்போதும் கோவை சரளா படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். ஆச்சி மனோரமாவுக்கு பிறகு காமெடி நடிப்பில் ஜெயித்தவர் நடிகை கோவை சரளா என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் 60 வயதுகளை கடந்தும் கோவை சரளா திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இதற்கு காரணம் மற்றவர்களது திருமண வாழ்க்கையை பார்த்து பார்த்து தனக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணமே வரவில்லை என்றும், கடைசி வரை கணவர் நம்முடன் வரப்போவதும் இல்லை என்றும் கோவை சரளா முதிர்ச்சியாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கோவை சரளா கூறியதாவது, இயக்குனர் பாக்யராஜ் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது நான் சினிமாவில் ஹீரோவாகி விட்டால் நீ தான் கதாநாயகி என்று என்னிடம் சொல்லி இருந்தார். அப்போது சுவரில்லாத சித்திரங்கள் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. பெரிய ஆளாக மாறிவிட்டதால் நம்மை மறந்துவிட்டார் என்று நினைத்தேன்.
அப்போது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலில் பாக்யராஜ் தங்கியிருந்தார். அந்த தகவல் எனக்கு தெரிந்ததால் அவரைப் பார்க்க நான் அங்கு போனேன். என்னை பார்த்ததும் அதிர்ச்சியான அவர், நீ எதுக்கு இங்க வந்தே என்று கேட்டார். உங்களை பார்க்க தான் வந்தேன் என்று நான் சொன்னேன். நீ வீட்டுக்கு போ என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தார்.
அப்போது என்னை கதாநாயகி ஆக்குகிறேன் என்று சொன்னீர்களே என்று கேட்டேன். அப்போது அவர், நான் இப்போது முந்தானை முடிச்சு படம் எடுக்க போகிறேன். அதில் எல்லா கேரக்டரும் பிக்ஸ் ஆகிவிட்டது. இருந்தாலும் உனக்கு ஒரு கேரக்டர் கொடுக்கிறேன். நீ நடி என்று சொன்னார். ஆனால் நீங்கள் கதாநாயகி ஆக்குகிறேன் என்றுதானே சொன்னீர்கள் என்று கேட்டேன். அதெல்லாம் பேசக்கூடாது. நான் சொல்றேன் நீ நடி என்று சொல்லி விட்டார் என்று அந்த நேர்காணலில் நடிகை கோவை சரளா கூறியிருக்கிறார்.





