தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் முரளி. எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் ஆற்றல்மிக்க அவர், உடல் நலக்குறைவால் மறைந்து போனார். இவரது மகன் அதர்வா 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.
திரைப்படம் ஓரளவு பேசப்பட்டாலும் அது வெற்றி படமாக அதர்வாவுக்கு மாறவில்லை. இதன் பிறகு அதர்வா நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன. பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம், அதர்வாவின் நடிப்பிற்கு மற்றொரு சான்றாக அமைந்தது. இருப்பினும் அந்த திரைப்படம் அனைவரிடமும் சேரவில்லை.
முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்பு குதிரை, சண்டி வீரன் என அதர்வா நடித்த திரைப்படங்கள் அத்தனையும் படுதோல்வியை சந்திக்க, அந்த சமயத்தில் ஈட்டி திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இருப்பினும் அதர்வாவுக்கு அது ஒரு திருப்புமுனை படம் என்று கூற முடியாது.
தொடர்ந்து வெற்றி திரைப்படங்கள் கொடுப்பதற்காக போராடி வந்த அதர்வாவுக்கு அனைத்துமே சருக்கலைதான் கொடுத்து வந்தன. கணிதன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாதே, பூம்புராங், குருதி ஆட்டம், ட்ரிகர், பட்டத்து அரசன் என அதர்வாவின் தோல்வி திரைப்படங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியான சூழலில்தான் அவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் உடன் இணைந்தார்.
ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நெல்சன் வெங்கடேசன். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல விமர்சனத்தையும் பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது. பிறகு எஸ்.ஜே.சூர்யாவை வைத்து மான்ஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு எலியை மையமாக வைத்து மிக அற்புதமாக அந்த திரைப்படத்தை வழங்கி இருந்தார் இயக்குனர்.
இதனால் நெல்சன் வெங்கடேசன் அதர்வா இணைந்த டிஎன்ஏ திரைப்படத்தின் மீது ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வரும் இருபதாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், பத்திரிகையாளர்களுக்கு நேற்று இந்த திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. இதில் படம் பார்த்த அனைவருமே, டி என் ஏ நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். அருமையான த்ரில்லர் கதையை இயக்குனர் எடுத்திருப்பதாகவும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கதாநாயகியாக நடித்திருக்கும் நிமிஷா தனது பங்கை சிறப்பாக செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தற்போது இணையத்தில் டி.என்.ஏ திரைப்படம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.





