கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பேசப்பட்ட விடயமாக இருந்தது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட் ஆகியோரது திருமணம் தான். இந்திய மதிப்பில் சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று முடிந்த திருமணத்தில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என அனைவருமே ஒரே இடத்தில் குழுமி இருந்தனர்.
அதோடு இந்த திருமணத்திற்கு பிரத்தியேகமாக நூற்றுக்கணக்கான பிரைவேட் ஜெட்டுகள், மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் என திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களுக்காக பிரத்யேக ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.
அதோடு இந்தியா துவங்கி வெளிநாடுகள் வரை உள்ள அனைத்து பிரபல பாடகர்கள் இசையமைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பல்வேறு இசை கச்சேரிகளும் நடத்தி இருந்தனர். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தில் இருந்து அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், சிரஞ்சீவி என பல்வேறு சூப்பர் ஸ்டார்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நடனமாடியிருந்தனர்.
அதேபோன்று தமிழ் திரையுலகை சேர்ந்த சூர்யா ஜோதிகா, நயன்தாரா விக்னேஷ் சிவன், அட்லீ பிரியா என முக்கிய தம்பதிகளும் இந்த திருமண விழாவில் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் இந்த திருமண விழாவின் இரண்டாம் நாளில் அட்லீ இயக்கிய ஒரு 10 நிமிட அனிமேஷன் படம் விருந்தினர்களுக்காக ஒளிபரப்பானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 10 நிமிட அனிமேஷன் படத்திற்காக அட்லீக்கு ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அதே சம்பளத்தை அம்பானியின் குடும்பம் வழங்கியுள்ளதாக பிரபல யுடியூபர் ஒருவர் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில் : அட்லீ இயக்கிய அந்த 10 நிமிட அனிமேஷன் படத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்ததாகவும் அந்த படமானது விருந்தினர்களுக்காக பிரத்தியேகமாக திருமணத்தின் இரண்டாவது நாளில் ஒளிபரப்பானதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜவான் படத்திற்கு பிறகு மும்பையில் முற்றிலுமாக குடியேறிய அட்லீ தனது மனைவியுடன் அம்பானி குடும்பத்தின் திருமண நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஒன்று விடாமல் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





