நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் குட் பேட் அக்லி படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். ஏற்கனவே கிரீடம் என்னை அறிந்தால் விடாமுயற்சி படங்களில் திரிஷா நடித்த நிலையில், இந்த படத்தில் அவரே அஜீத்குமாருடன் ஜோடி சேர்ந்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் பிரபு பிரசன்னா சுனில் அர்ஜூன்தாஸ் பிரியா வாரியர் சிம்ரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் பல பழைய பாடல்களை ஆதிக் ரவிச்சந்திரன் ஒலிக்க விட்டிருந்தார். அதில் அஜீத் பட பாடல்கள் மட்டுமின்றி ஒத்த ரூபா தாரேன் இளமை இதோ இதோ என் ஜோடி மஞ்சக் குருவி போன்ற பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
அஜீத்குமார் திரிஷா நடிப்பில் வெளியான முந்தைய படம் விடாமுயற்சி சரியான வரவேற்பை பெறாத நிலையிலும், அப்படி ஒரு வித்யாசமான கேரக்டரில் மாஸ் ஹீரோ அஜீத்குமார் நடித்ததை பலரும் வரவேற்று பாராட்டவே செய்தனர். ஏனெனில் படத்தின் கதைக்காக கேரக்டருக்காக மிக அழுத்தமான நடிப்பை அஜீத்குமார் அந்த படத்தில் தந்திருந்தார்.
அந்த சூழலில் குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்திருந்த நிலையில் எதிர்பார்ப்பை பலமடங்கு நிறைவு செய்யும் வகையில் குட் பேட் அக்லி படத்தை காட்சிக்கு காட்சி அஜீத்குமாரின் புகழ்பாடும் ஒரு படைப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கி தந்திருக்கின்றனர். கதை திரைக்கதை லாஜிக் எல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால் இந்த படம் உற்சாகமான ஒரு சூப்பர் ஹிட் படம்தான்.
கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் உலகளவில் ரூ. 30.9 கோடி என்ற வசூலலை முதல் நாளில் தொட்டது. பிறகு 2வது நாளில் 90 கோடி ரூபாய் வசூலை கடந்தது. 3வது நாளில் ரூ. 120 கோடியும், 4ம் நாளில் ரூ. 150 கோடியும், 6வது நாளில் ரூ. 180 கோடியும் 7வது நாளில் ரூ. 200 கோடியும் தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 7 நாட்களில் குட் பேட் அக்லி படம் ரூ. 114 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் ரூ. 150 கோடியை வெகு எளிதாக நெருங்கிவிடும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பெரும்பாலான தியேட்டர்களில் குட் பேட் அக்லி படத்துக்கு கூட்டம் குறையவில்லை. ரிபீட் ஆடியன்ஸ் வருகை அதிகம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.





