விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற பிரமோ வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை, கவனத்தை பெற்றுள்ளது.
ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சியில் என்னால் பணியை தொடர முடியாது என்ற அறிவித்த நிலையில், அவரது தொகுப்பாளர் பணியை மேற்கொள்ள நடிகர் விஜய் சேதுபதியை விஜய் டிவி நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 150 கோடி சம்பளமாக வழங்கிய விஜய் டிவி நிர்வாகம், நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ. 50 கோடிதான் நிர்ணயித்துள்ளது. நிகழ்ச்சியில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சம்பளம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் கமல்ஹாசன் அளவுக்கு பெரிய சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை.
விஜய் சேதுபதியை பொருத்த வரை, அடிமட்டத்தில் துணை நடிகராக இருந்து பிறகு படிப்படியாக நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்தவர். சமீபமாக அவரது நடிப்பில் வெளியான 50வது படம், மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து டிரெயின், விடுதலை 2 என அவர் நடித்த படங்கள் வெளிவர இருக்கின்றன. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர், கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் பேசும்போது, கமல் இடத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாராலும் நிரப்பவே முடியாது என்று ஓபனாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ரச்சிதா மகாலட்சுமி கூறுகையில், எந்த தலைப்பாக இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் கமல் அதுபற்றி சில நிமிடங்கள் பேசுவார். மக்களும் அதை ரசித்து கேட்பார்கள். அந்தளவுக்கு அவருக்கு நாலேட்ஜ் உள்ளது. ஆனால் விஜய் சேதுபதி எல்லோரிடமும் எளிமையாக பழகக் கூடியவர். அவர் வந்தால் போட்டியாளர்கள் அனைவரும் அவரிடம் ஜாலியாக பேசி, எளிமையாக பழக முடியும் என்று நினைக்கிறேன், என ரச்சிதா கூறியிருக்கிறார்.





