நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் கடந்த 12ம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. படத்துக்கு ஓப்பனிங் அன்று கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த நாட்களில் குறைந்து போனது. எதிர்பார்த்த அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை.
வழக்கமான ஆக்ஷன் படங்களை போல இல்லாமல், கத்தி துப்பாக்கி ரத்தம் சண்டையை நம்பாமல், ஏலியன் பொம்மையை நம்பி இந்த படத்தை உங்களுக்கு தந்திருக்கிறோம் என சிவகார்த்திகேயன், படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பேசினார். படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் உறுதியளித்தார்.
சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியிருந்தார். தொழில்நுட்ப ரீதியாக இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக பலரும் பாராட்டினாலும், படத்துக்கும் ரசிகர்களுக்கும் ஒரு இணைப்பு இல்லாததுதான் பெரிய மைனஸ் பாயிண்டாக போய்விட்டது.
கரகாட்டக்காரன் போன்ற படங்களை இன்றும் ரசிகர்கள் ரசித்து பார்க்க காரணம், அந்த படம் இப்போதும் மனதுக்கு நெருக்கமான, பிடித்தமான படமாக இருக்கிறது. இப்படி வந்த படங்கள்தான், பெரிய அளவில் வெற்றியை பெறுகின்றன. மக்களிடம் ஒரு படம் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அது இந்த படத்தில் மிஸ் ஆகியிருந்ததால் ரசிகர்கள், அந்நியமாக அந்த படத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
எனினும் படத்தின் 2ம் பாகத்தை வெளியிட, தயாரிப்பாளர் தரப்பில் முயற்சி நடக்கிறது. ஏனெனில் 6 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த படம், நிறைய விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 4000 மேற்பட்ட காட்சிகளில் சிஜி பணிகளும் நடந்துள்ளதால், சிவகார்த்திகேயன் உதவி இல்லாமலேயே அயலான் 2ம் பாகம் வௌியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அயலான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. சன் நெக்ஸ்ட் ஓடிடி நிறுவனம்தான் இந்த படத்தை வெளியிடுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.





