இந்திய சினிமாவில் மிகப் பிரமாண்டமான இயக்குனர் என்னும் பெயரை பெற்றவர் ராஜமவுலி. ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அவரை, ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் திரும்பி பார்க்க வைத்தது நான் ஈ திரைப்படத்தில்தான். ஒரு ஈ, ஒரு மனிதனை பழி வாங்கினால் எப்படி இருக்கும் என்கின்ற கான்செப்ட்டை மையமாக வைத்து, அட்டகாசமான படத்தை கொடுத்திருந்தார் ராஜமவுலி.
இதற்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படம்தான் பாகுபலி. பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அனுஷ்கா ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் ராணா நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் உலக சினிமாவிலும் பாகுபலி திரைப்படம் குறித்த டாக் எழுந்தது.
அதில் ஆரம்பத்தில் இருந்தே அசத்தலான திரைக்கதையை கொடுத்திருந்தார் ராஜமவுலி. முதல் பாதி முழுக்க சிபு கதாபாத்திரத்தை விளக்கிய அவர், இரண்டாம் பாதியில் பாகுபலி கதையை கூறியிருப்பார். மன்னர் கால கதையை மிக சுவாரசியமாகவும், நறுக்கென்றும் காட்சிப்படுத்தியிருந்தார் ராஜமவுலி. அதிலும் இறுதிக் காட்சியில் பாகுபலியை, கட்டப்பா கதாபாத்திரமான சத்யராஜ் முதுகில் குத்தி கொலை செய்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்விதான் அப்போது இந்திய சினிமாவில் ஹாட் டாக். இப்படி இதன் முதல் பாகமே அதன் இரண்டாம் பாகம் அமைவதற்கு வாசலாய் அமைந்தது. அந்த எதிர்பார்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு கச்சிதமாக இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்தார் ராஜமௌலி. 2018 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இந்த திரைப்படம். முதல் பாகத்திற்கு விட இரண்டாம் பாகத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க திரையரங்குகளுக்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ்கள் முந்தினர். இப்படி இரண்டு பாகங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், ராஜமௌலியின் மார்க்கெட் எகிறியது.
இப்படியான சூழலில் தற்போது பாகுபலி திரைப்படத்திலிருந்து தி எபிக் வெளியாக இருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை சேர்த்து இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார்கள். இது மட்டும் மொத்தமாக ஐந்தரை மணி நேரத்திற்கு மேல் இருந்ததாம். அதனை மூன்று மணி நேரம் 44 நிமிடங்களாக குறைத்திருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பங்களோடு இந்த திரைப்படம் வருகிறது. தணிக்கை குழு இதற்கு யு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. வரும் 31ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.





