விக்ரம் திரைப்படத்தின் மூலம் எல் சி யு ஃபார்மட்டை கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ். அதில் தனது முந்தைய திரைப்படமான கைதியின் கதாபாத்திரங்களை வைத்து அசர வைத்திருந்தார். தொடர்ந்து லியோ திரைப்படத்திலும் எல் சி யு வை புகுத்திருந்தார் லோகேஷ். அவரது இந்த ஐடியா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அதை மேம்படுத்தும் பணிகளில் இயக்குனர் ஈடுபட்டு இருக்கிறார்.
சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களான விஜய், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் இந்த எல் சி யு வுக்குள் வந்திருப்பதால் அது தொடர்பான பேச்சு அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படியான சூழலில், முதல்முறையாக வேறு ஒரு இயக்குநரை வைத்து எல் சி யு கான்செப்ட்டை டெவலப் செய்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
பென்ஸ் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ரெமோ, கார்த்தியுடன் சுல்தான் ஆகிய திரைப்படங்களை எடுத்த பாக்யராஜ் கண்ணன் இதனை இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் நடிக்கின்றனர். அண்மையில் நிவின் பாலியின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சாய் அபயங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். திடீரென இந்த திரைப்படம் எல் சி யுக்குள் வரும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்ததால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது. இப்படியான சூழலில் அந்த திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். இதுகுறித்து அவர் பேசி இருப்பதாவது,
லோகேஷ் கனகராஜும் நானும் நண்பர்கள். பிற இயக்குனர்களும் எல் சி யூ தொடர்பான படங்களை எடுப்பது குறித்த ஐடியாவை லோகேஷ்தான் கொடுத்தார். பென்ஸ் திரைப்படத்தில் இருக்கும் காட்சிகள் அனைத்துமே, மற்ற எல் சி யு படங்கள் போன்று ஒரே நேர்கோட்டில்தான் இருக்கும். இது எல் சி யூ திரைப்படங்களின், முந்தைய பாகமாகவோ அல்லது பிந்தைய பாகமாகவோ இருக்காது.
இது தொடர்பான கதையை லோகேஷ் கனகராஜ் என்னிடம் வழங்கினார். நான் அதை டெவலப் செய்தேன். இதுபோன்ற ஒரு யுனிவர்சை ஹாலிவுட்டில்தான் பல்வேறு இயக்குனர்கள் எடுப்பார்கள். தற்போது அந்த வாய்ப்பு இந்திய சினிமாவிலும் வந்துவிட்டது. படத்தில் ராகவா லாரன்ஸ்க்கும் எதிர்மறையான கதாபாத்திரம்தான் இருக்கும். வழக்கமான வில்லன் டெம்ப்லேட் இருக்கக் கூடாது என்பதற்காகவே நிவின்பாலி கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.





