பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் பைசன். இந்தத் தலைப்புக்கு கீழே காளமாடன் என்று டேக் லைன் வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஏற்கனவே பேசியிருந்த மாரி செல்வராஜ், முதலில் படத்திற்கு காளை மாடு என்று தான் தலைப்பு வைத்ததாக கூறியிருந்தார்.
ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் இது போய் சேர வேண்டும் என்பதால்தான் தலைப்பை, பைசன் என்று வைத்ததாக அவர் தெரிவித்தார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அண்மையில் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், பைசன்தான் எனது முதல் திரைப்படம் என்றும் கண்டிப்பாக இதை நீங்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மனத்தி கணேசன் எனும் கபடி வீரரின் வாழ்க்கையை, மையப்படுத்தி அதில் தனது கதையையும் சேர்த்து இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாக மாரி செல்வராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். அது மட்டுமல்ல இந்த திரைப்படத்தின் சூட்டிங் 90 நாட்களில் முடிவடைந்ததாகவும், அதற்காக இரண்டு ஆண்டுகள் கபடி பயிற்சியை துருவ் எடுத்திருந்ததாகவும் தெரிவித்தார் மாரி செல்வராஜ்.
படத்தில் துருவுக்கு தந்தையாக பசுபதி நடித்திருக்கிறார். கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, ரஜிஷா விஜயனுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பைசனில் அமீர் நடித்திருப்பதுதான் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இந்த தகவலை பட குழுவினர், சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளனர். இதேபோல் லாலும் படத்தில் நடித்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேலாக ஓடும் அந்த முன்னோட்டத்தை பார்க்கும்போது, கபடி விளையாட்டுக்காக தன்னை எந்த அளவுக்கு துருவ் விக்ரம் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. நிவாஸ் கே பிரசன்னாவும், இசையில் விளையாடி இருக்கிறார்.
அனல் பறக்க அவரது பின்னணி இசை இருப்பது முன்னோட்டத்தை பார்க்கும் போதே உறுதியாகிறது. பல தடைகளுக்கு மத்தியில், துருவ் விக்ரம் அதனை வென்று, கபடியில் பெரிய வீரர் ஆவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ட்ரெய்லர் தரமாகவும் திருப்தியாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி பைசன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





