நடிகர் வடிவேலு என்றாலே சிரிப்பு வந்துவிடும். அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த ஒரு சிறந்த கலைஞன். அவரது திறமை மீது இன்று வரை யாரும் குறை சொல்ல முடியாது. இருபுறமும் மேல் நோக்கிய மீசையில் மல்லிகை மொட்டுகளை வைத்துக்கொண்டு புலிகேசியாக வந்து சிரிக்கவும் வைப்பார். மாமன்னன் போன்ற கேரக்டரில் சிந்திக்கவும் வைப்பார்.
ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல நகைச்சுவை கலைஞனாக வெற்றிப் பெற்ற அவர், சமுதாயத்தில் நல்ல பண்புமிக்க மனிதராக பெயர் வாங்க முடியாமல் போய்விட்டது. காரணம், புகழும் செல்வாக்கும் கொடுத்த மமதையால் அவர் தன்னிலை மறந்து நடந்துக் கொண்டதுதான்.
குறிப்பாக அவர் நடிகர் விஜயகாந்தை மதிக்காமல் நடந்துக்கொண்டு அவருக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தது எல்லாம், அவருக்கு அவரே வைத்துக்கொண்ட வெடியாக தான் பின்னாளில் அமைந்தது. கேப்டனுடன் அனுசரித்து போயிருந்தால் இன்னும் உயரத்துக்கு வடிவேலு போயிருப்பார்.
விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாவிட்டாலும், அறிக்கை வாயிலாக இரங்கல் தெரிவித்து வருத்தத்தை கூறியிருக்கலாம். அல்லது வீடியோ பேசி வெளியிட்டு இருக்கலாம். சமீபத்தில் நடிகர் ராஜ்கிரண் சென்ற பேட்டரி காரில் செல்ல மறுத்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வடிவேலு.
வடிேவலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் பெஞ்சமின் கூறுகையில், நான், நடிகர் போண்டாமணி போன்றவர்கள் ரசிகர்கள் மத்தியில் தெரிய வடிவேலுதான் காரணம். அவர் ஒரு சிறந்த கலைஞர்தான். ஆனால் நல்ல மனிதர் கிடையாது. அவருடன் நடிக்கும் எங்களையே அவர் கண்டுக்கொள்ள மாட்டார்.
படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் நாங்கள் கஷ்டப்படுவோம். ரோட்டில் நிற்போம். அதுபற்றி எல்லாம் கேட்காமல் கேரவன் வேனுக்குள் வடிவேலு இருப்பார். அங்கு அவர் சாப்பிட்டு விடுவார். விஜயகாந்த் மற்றவர்கைள சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். தன்னுடன் இருப்பவர்கள் பட்டினியே இருந்தாலும் அதையெல்லாம் வடிவேலு கண்டுகொள்ளவே மாட்டார், என்று பெஞ்சமின் கூறியிருக்கிறார்.





