பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் பைசன் காளமாடன். இந்த திரைப்படத்திற்காகவே இரண்டு ஆண்டுகள் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் காத்திருந்தார் என்று கூறலாம். சொல்லப்போனால் கர்ணன் திரைப்படத்தை முடித்துவிட்டு பைசன் படத்தை எடுப்பதாகத்தான் இருந்தது. பிறகு அதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதில் சில விஷயங்களை தனக்கு ஏற்றது போல் மாற்றி கதை கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ். படத்தை ஆரம்பிக்கும்போதே இந்த விஷயத்தை சொல்லி விடுகிறார்கள். திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தின் கதை நகருகிறது.
கிட்டான் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். அவரின் தந்தையாக பசுபதி வருகிறார். அக்கா கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயனும், காதலியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்தே கபடி விளையாட்டின் மீது தனி விருப்பத்தை செலுத்துகிறார் துருவ் விக்ரம். ஆனால் இது அவரது தந்தையான பசுபதிக்கு பிடிக்கவில்லை.
கபடி விளையாட்டில் சேர்ந்தால் வன்முறை சார்ந்த விஷயங்கள் வரும் என்று பயப்படுகிறார். அதேசமயம் துருவ் திறமையை பார்த்து, அவருக்கு கபடி விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறார் ஆசிரியர். இது ஒரு பக்கம் இருக்க அவர்களது ஊரில் சாதிய மோதலும் நடக்கிறது. இரு பிரிவினர்கள் அடிக்கடி தாக்கி கொள்கிறார்கள்.
இதில் துருவ் எப்படி பாதிக்கப்பட்டார் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை தான் திரைக்கதையில் சுவாரசியமாக கூறியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். வழக்கம்போல தனது வட்டார பகுதிகளில் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கும் அவர், அதில் ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார். அமீர் கதாபாத்திரம் மற்றும் லால் கதாபாத்திரமும் சரியான விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவே சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேபோன்று மாரி செல்வராஜின் முந்தைய திரைப்படங்களையும் இது நினைவுபடுத்துவதாக பலர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை பைசன் கொடுத்திருப்பதாகவும், குறிப்பாக துருவ் விக்ரம் மற்றும் பசுபதியின் கதாபாத்திரங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பலரும் சொல்லி வருகின்றனர். ஒட்டு மொத்தமாக பார்க்கையில் பைசன் திரைப்படம் நல்ல விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.





